மும்பை பெண் ஊடகவியலாளர் பாலியல் வல்லுறவு: ஆர்ப்பாட்டம்

mumbai gang rapeஇந்தியாவின் மும்பை நகரில் வியாழனன்று பெண் ஊடகவியலாளர் ஒருவர் பலரால் ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக அந்நகர பொலிசார் கூறுகின்றனர்.

இச்சம்பவத்தில் தொடர்புபட்டிருந்த வேறு நான்கு சந்தேக நபர்களையும் விரைவில் கைதுசெய்வோம் என்று அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

கைவிடப்பட்ட ஆடைத் தொழிற்சாலை ஒன்றை பணிக்காகபடமெடுக்கச் சென்றிருந்தபோது இந்த 22 வயதுப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

அந்நேரம் அப்பெண்ணோடு சென்றிருந்த உடன் வேலைபார்க்கும் ஆண் ஒருவர் கட்டிவைத்து தாக்கப்பட்டுள்ளார்.

சென்ற வருடம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தில்லி பாலியல் வல்லுறவுச் சம்பவத்தை போன்ற ஒரு சம்பவம் இது.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

அவரது நிலை கவலைக்கிடமாக இல்லை என்று கூறப்படுகிறது.

ஏனைய சந்தேக நபர்களை அடையாளம் காண உதவும் வரைபடங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து மும்பை பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

நாடாளுமன்ற மேலவையில் இந்த விவகாரத்தை பாரதீய ஜனதா கட்சியின் ஸ்மிருதி இரானி எழுப்பினார். குற்றவாளிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் உறுதியளித்தார்

துணை மருத்துவக் கல்வி கற்றுவந்த டில்லி மாணவி, கடந்த ஆண்டு பலரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இது போன்ற சம்பவங்களைத் தடுக்க கடுமையான சட்டங்கள் வேண்டும் என்ற கோரிக்கை பலமாக முன்வைக்கப்பட்டது.

அதே போல பாலியல் வல்லுறவில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு எதிரான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டன. இருந்தும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்கின்றன. -BBC

TAGS: