மெட்ராஸ் கபே படத்துக்கு தமிழக திரையரங்குகளின் ஒத்துழைப்பு இல்லை

m2ஷூஜித் சர்கார் இயக்கத்தில், ஹிந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாக்கப்பட்ட மெட்ராஸ் கபே திரைப்படம் இன்று ஆகஸ்ட் 23ஆம் தேதி இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் வெளியானது. ஆனால் தமிழகத்தில் வெளியாகவில்லை.

இத்திரைப்படம் இலங்கைத் தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் படத்தில் தவறாக சித்திரித்திருப்பதாக புகார் கூறி மதிமுக கட்சி தலைவர் வைகோ, நாம் தமிழர் இயக்கதின் தலைவர் சீமான் மற்றும் சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்தும் திரைப்படத்திற்கு தடை விதிக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர். திரைப்படத்தை தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றதில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு தடை விதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இருப்பினும் இத்திரைப்படத்தின் ஹிந்தி மற்றும் தமிழ் மொழிமாற்ற பதிப்புகள் இன்று தமிழ் நாட்டில் வெளியாகவில்லை.

எதிர்ப்பாளர்களின் கோரிக்கையின்படி படத்தை போட்டுக் காண்பித்த பின்னரும் எதிர்ப்பு வலுத்தபடியால், போலிஸ் பாதுகாப்பு கோரியிருந்ததாக அதன் தென்னிந்திய விநியோகஸ்தர் விஜய் ஆறுமுகம் கூறினார்.

பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தயாராக இருக்கும் நிலையில் திரையரங்குகள் எதுவும் தமக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.

ஆனால், தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கான ஆதரவு நிலை அதிகரித்திருப்பதாலேயே படத்தை திரையரங்குகள் வெளியிட மறுத்துள்ளதாக தமிழக விநியோகஸ்தர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கலைப்புலி சேகர் தமிழோசையிடம் கூறினார்.

இந்நிலையில் திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன .

இந்த வருடத்தில், தமிழகத்தில் எதிர்ப்பு காரணமாக குறித்த தேதியில் திரைப்படம் ஒன்றை வெளியிடாமல் போன மூன்றாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, விஸ்வரூபம், தலைவா ஆகிய படங்கள் பிரச்சனையை எதிர்நோக்கியிருந்தன.

மெட்ராஸ் கபே திரைப்படத்துக்கு எதிராக இணையங்களில் செய்யப்பட்ட பிரசாரத்தை பிரிட்டனிலும் இந்தப் படம் திரையிடப்படவில்லை என்று தமிழ் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

பிரிட்டனில் இந்தப் படம் திரையிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ள திரைப்படத் தரப்பினர், பாதுகாப்பு காரணங்களால் தான் அந்தப் படம் வெளியாகவில்லை என்றும் கூறியுள்ளனர். -BBC

TAGS: