தமிழக-இலங்கை மீனவர்கள் பேச்சு நடத்த ஜெயலலிதா ஒத்துழைக்க வேண்டும்

salman_kurshidதமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒத்துழைக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.

இது தொடர்பாக தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய ஊடக மையத் திறப்பு விழாவில் பங்கேற்ற அவர் “தினமணி’ நிருபரிடம் கூறியது:

“தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருவதாகத் தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல் கட்சிகள் கூறுகின்றன. இந்த விஷயத்தில் சுமுகத் தீர்வு ஏற்பட வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது.

கடந்த மாதம் என்னையும் மத்திய அரசின் உயரதிகாரிகளையும் தமிழக மீனவர்கள் குழு சந்தித்துப் பேசியது. அப்போதே அவர்களிடம் “நீடித்து வரும் பிரச்னைக்கு தீர்வு காண இலங்கை மீனவர்களுடன் பேச்சு நடத்துங்கள். அதற்கு தேவையான உதவியை மத்திய அரசு வழங்கும்’ என்று உறுதியளித்தேன்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசும், மத்திய அரசுடன் சேர்ந்து செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் குழு மாநில அரசின் ஆதரவுடன் இலங்கை சென்று திரும்ப வேண்டும் என விரும்புகின்றனர்.

ஆனால், இதுவரை அவர்களுக்கு உரிய அனுமதியை தமிழக அரசு தரவில்லை என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இந்த விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தி தமிழக மீனவர்கள் இலங்கை சென்று திரும்ப ஒத்துழைக்க வேண்டும்.

தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்த உடனேயே இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் தமிழக-இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும். இந்த பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என இலங்கை அரசும் எதிர்பார்க்கிறது.

காமன்வெல்த் நாடுகள் தலைவர்கள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்பது குறித்து இன்னும் அலுவல்பூர்வமாக மத்திய அரசு முடிவு செய்யவில்லை. அக்கூட்டம் நடைபெற இன்னும் சில மாதங்கள் உள்ளன. இந்த விவகாரத்தில் குரல் எழுப்பும் தமிழக அரசியல் கட்சிகளின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கிறது. ஆகவே, எல்லா அம்சங்களையும் ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும்’ என்றார் சல்மான் குர்ஷித்.

TAGS: