பிரதமரும், ரூபாய் மதிப்பும் ஊமையாகி விட்டன: முதல்வர் நரேந்திர மோடி கடும் விமர்சனம்

modi2ராஜ்கோட்: “”பிரதமர் மன்மோகன் சிங்கும், இந்திய ரூபாய் மதிப்பும், ஊமையாகி விட்டன,” என, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில், புதிதாக ஏழு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான, அறிவிப்பு, கடந்த, 15ம் தேதி வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக, ராஜ்கோட்டில் நடந்த பாராட்டு விழாவில், முதல்வர் மோடி பேசியதாவது: ஒரு காலகட்டத்தில், இந்திய ரூபாயின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.

ஆனால், இந்திய ரூபாய் மதிப்பு, தற்போது, தன் குரலை இழந்து, அமைதியாகி விட்டது. அதேபோல் தான், பிரதமர் மன்மோகன் சிங்கின் குரலையும், நம்மால் கேட்க முடிவதில்லை.

பிரதமரும், இந்திய ரூபாய் மதிப்பும், ஊமையாகி விட்டன. இந்திய ரூபாய் மதிப்பு, மரணப் படுக்கையில் உள்ளது; அது இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதால், சரியான, “டாக்டர்’ மூலம், கவனிக்க வேண்டியது அவசியம்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இரண்டாவது முறையாக, ஆட்சிக்கு வந்த போது, “100 நாட்களில், பணவீக்கத்தை குறைப்போம்’ என, உறுதி மொழி அளித்தது. அந்த உறுதி மொழி காப்பாற்றப்படவில்லை.

மத்திய அரசும், இந்திய ரூபாயும், தற்போது மதிப்பை இழந்து விட்டன. நாடு சீரழியும் நிலைக்கு செல்வதை தடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

நாட்டை தவறான பாதையில் வழி நடத்திச் செல்கிறது மத்திய அரசு. நாடு ஏன் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை, மக்கள் உணர வேண்டும். இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

TAGS: