ஜெகன்மோகன் ரெட்டி காலவரையற்ற உண்ணாவிரதம்?

YS-Jaganஆந்திரத்தைப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஹைதராபாத் சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்க இருப்பதாக கூறப்பட்டதையடுத்து சிறையைச் சுற்றிலும் பாதுகாப்புக்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சொத்துக்குவிப்பு உள்பட பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஹைதராபாத் சஞ்சல்குடா சிறையில் கடந்த ஆண்டு மே மாதம் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் ஆந்திரத்தைப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கப்போவதாக தகவல் வெளியானது.

இதை தொடர்ந்து சஞ்சல்குடா சிறையைச் சுற்றிலும் பாதுகாப்புக்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி சஞ்சல்குடா சிறை கண்காணிப்பாளர் சைதய்யா கூறும்போது, உண்ணாவிரதம் பற்றி ஜெகன் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்றார்.

இன்னொரு சிறை அதிகாரி கூறும்போது, ஜெகன்மோகன் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் எதுவும் சாப்பிடவில்லை. என்றாலும் 12 மணி நேரம் கழித்த பிறகுதான் அவரது உண்ணாவிரதம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியும் என்றார்.

ஆந்திரத்தைப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெகனின் தாயார் ஒய்.எஸ்.விஜயம்மா குண்டூரில் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை சனிக்கிழமை முடித்துக் கொண்டார். அப்போது அவர் கூறும்போது, ஒருங்கிணைந்த ஆந்திர மக்களுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி ஜெகன்மோகன்ரெட்டி உண்ணாவிரதம் மேற்கொள்வார் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

TAGS: