“ஆந்திராவைக் கூறு போடக் கூடாது’ என மாநிலம் முழுவதும் எதிர்ப்புப் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில், “ஆந்திராவை மூன்றாகப் பிரித்தால், பிரச்னைக்குத் தீர்வு காணலாம்’ என, காங்., மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கிஷோர் சந்திர தியோ ஆலோசனை தெரிவித்து உள்ளார்.
ஆந்திராவை இரண்டாகப் பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க, காங்கிரஸ் செயற்குழுவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் முடிவு செய்தன. தெலுங்கானா பிரிவினைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் பலர், ராஜினாமா செய்து வருகின்றனர்.
ஆந்திராவின் கடலோரப் பகுதிகளிலும், ராயலசீமா, சீமந்தரா பகுதிகளிலும், தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தில், காங்கிரசுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து வருகின்றன. தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்குவது குறித்து, ஆந்திர மக்களின் கருத்து அறிந்து முடிவு செய்வதற்காக, ராணுவ அமைச்சர் அந்தோணி தலைமையில், கமிட்டி ஒன்றை காங்கிரஸ் அமைத்து உள்ளது.
இக்கமிட்டிக்கு, மத்தியப் பழங்குடியின மக்கள் நலத்துறை அமைச்சரும், ஆந்திரக் கடலோரப் பகுதியில் இருந்து, ஐந்து முறை, எம்.பி.,யாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவருமான, கிஷோர் சந்திர தியோ எழுதியுள்ள கடிதத்தில், “ஆந்திராவை மூன்றாகப் பிரிக்க வேண்டும். இதுதான், இப்போதைய பிரச்னைக்குச் சரியான தீர்வாக இருக்கும். ஐதராபாத் நகரை, யூனியன் பிரதேசமாக்க வேண்டும்’ என, குறிப்பிட்டு உள்ளார்.
கடிதத்தில் மேலும் அவர் கூறியிருப்பதாவது:ஆந்திராவை, தெலுங்கானா, ராயலசீமா, ஆந்திரா என, மூன்றாகப் பிரிக்க வேண்டும். ஆந்திராவின் புதிய தலைநகராக, விசாகாப்பட்டினத்தை அறிவிக்க வேண்டும். இதுதான், மாநிலத்தின் மூன்று மண்டலங்களில் உள்ள மக்களைத் திருப்திப்படுத்தும் வகையில், நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.
“தெலுங்கானா பகுதியைப் பிற்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து, அதற்குப் பொருளாதாரச் சிறப்புச் சலுகை வழங்கலாம்; தெலுங்கானா வளர்ச்சி கவுன்சில் அமைத்து, அதன் தலைவருக்கு, காபினட் அந்தஸ்து வழங்கலாம்’ என, இரண்டாண்டுகளுக்கு முன் ஆலோசனை வழங்கி இருந்தேன். இதைப் பரிசீலிக்கவே இல்லை.
இப்போது மூன்றாகப் பிரிப்பதன் மூலம், காங்கிரஸ் கட்சிக்கு லோக்சபாவில் மீண்டும் அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். தெலுங்கானா, கடலோர ஆந்திராவில் தலா, 17 லோக்சபா தொகுதிகளும், ராயலசீமாவில், 8 தொகுதிகளும் வரும். அப்படி அமைத்தால், இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், கோவா, புதுச்சேரி, திரிபுரா, சிக்கிம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றை விட, ராயலசீமா அதிக தொகுதிகளைக் கொண்ட மாநிலமாக இருக்கும்.
தெலுங்கானா பிரச்னைக்குத் தீர்வு காண, மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டியும், மாநில காங்., தலைவர் போட்சா சத்யநாராயணாவும் தவறிவிட்டனர். ஆனால், எம்.பி.,க்களையும், கடலோர ஆந்திராவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களையும், இருவரும் குறை கூறுவது நியாயமற்றது. இருவருமே, மாநிலத்தில் வன்முறைப் போராட்டங்களை ஆதரிக்கும் வகையில் செயல்படுகின்றனர். சுயலாபத்துடன் செயல்படும், இந்த இரு தலைவர்களின் செயலால், மாநில மக்கள் கவலையடைந்து உள்ளனர்.இவ்வாறு, அவர் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
ஆந்திராவை எத்தனை நாடாக பிரிந்து போனால் தமிழனுக்கு என்ன கவலை வேண்டி இருக்கிறது! 1954-இல் .இந்தியப் பிரதமர் பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் பேச்சைக் கேட்டு காங்கிரஸ் ஆட்சியில்முதல்வர் காமராசார் தமிழ் நாட்டின் வளமான, பசுமையான பகுதி நிலங்களை ஆந்திரா, கேரளா, கர்நாடகா விற்கு யோசிக்காமல் விட்டுக் கொடுத்தாரே!!! அந்நிலங்களை மீட்டாலே தமிழன் வளம் பெறுவான் தமிழ் நாடும் செழிக்கும். அவற்றை
மீட்பதிற்கு தமிழன் முனைப்பு காட்டட்டும். வெல்க தமிழ் நாடு!!!