இந்திய நாடாளுமன்ற மக்களைவையில் தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஜனத்தொகையில் 67 சதவீதம் பேருக்கு மானிய விலையில் உணவு தானியங்களை வழங்க வகைசெய்யும் சட்டம் இது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக இந்த மசோதா வர்ணிக்கப்படுகிறது.
மக்களுக்கு உணவு தானியங்களை வழங்குவதற்கான விநியோகக் கட்டமைப்பான ரேஷன் கடைகள் மூலம் கிராமப்பகுதிகளில் 75 சதவீதம் மக்களுக்கும் நகர்ப் புறங்களில் 50 சதவீதம் மக்களுக்கும் மலிவு விலையில் உணவு கிடைப்பதை சட்டபூர்வ உரிமையாக்குவதாக இந்த சட்ட மசோதா அமைந்துள்ளது.
கிலோ 3 ரூபாய் என்ற அடிப்படையில் மாதம் ஐந்துகிலோ அரிசியோ. கிலோ 2 ரூபாய் என்ற அடைப்படையில் ஐந்து கிலோ கோதுமையோ கிலோ 1 ரூபாய் என்ற விலையில் மாதம் ஐந்து கிலோ தானியமோ சலுகை விலை உணவு தானியங்களுக்கு தகுதி உடையவர்களுக்கு கிடைக்கும்.
யார் இந்த மலிவு விலை தானியத்துக்கு தகுதி உடையவர்கள் என்பதை மத்திய அரசின் வரையறைகளுக்கு ஏற்ப மாநில அரசு அடையாளம் காணும்.
அவசரச் சட்டமாக நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலையில் இந்த மசோதா இதற்கு முன் ஒரு தடவை கொண்டுவரப்பட்டிருந்தது. அப்போது நிறைவேறாத சூழ்நிலையில், தற்போதைய பருவமழைக்கால கூட்டத்தொடரில் அது மீண்டும் சமர்பிக்கப்பட்டது.
இந்த மசோதாவில் எதிர்க்கட்சிகள் கோரியிருந்த சுமார் 300 மாற்றங்களும் நிராகரிக்கப்பட்டிருந்தன.
வாய்வழி வாக்கெடுப்பு மூலம் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.