திருமலைக்கு செல்லும் பக்தர்களையும் தடுத்து நிறுத்துவோம்: தெலுங்கானா எதிர்ப்பு போராட்டக் குழு

Tirupati-templeஆந்திராவில் தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம் இன்று 28–வது நாளாக நீடித்து வருகிறது.

இதன் காரணமாக கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியில் பஸ் போக்குவரத்து நடைபெறவில்லை. அரசு அலுவலகங்கள், வங்கிகள் வர்த்தக நிறுவனங்கள் செயல்படவில்லை. ஒட்டு மொத்த மக்களும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

போராட்டம் காரணமாக திருப்பதியிலும் பஸ்கள் இயங்கவில்லை. திருப்பதியில் இருந்து திருமலைக்கு மட்டும் குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் சென்று வருகிறது. இதனால் ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைந்துள்ளது.

இந்த நிலையில் போராட்டத்தின் தீவிரத்தை மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில் 48 மணி நேர முற்றுகை போராட்டத்தை திருப்பதியில் நடத்த போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

நாளை காலை 6 மணிக்கு போராட்டம் தொடங்குகிறது. திருப்பதி நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களையும் தடுக்க போராட்டக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். ஏழுமலை யானை தரிசிக்க வரும் பக்தர்களின் வாகனங்களும் தடுக்கப்படுகிறது.

இதுகுறித்து ஐ.என்.டி. யூ.சி. கவுரவ தலைவர் பப்பு செங்கா ரெட்டி, அரசு ஊழியர் சங்க கூட்டு நடவடிக்கை குழு கன்வீனர் ஸ்ரீகாந்த் ரெட்டி ஆகியோர் கூறும்போது, 28, 29–ந்தேதிகளில் திருமலை செல்லும் பக்தர்களின் வாகனங்களை தடுத்து நிறுத்துவோம். அதேபோல் மலையில் இருந்து வாகனங்களை விடமாட்டோம். இதன் மூலம் எங்கள் போராட்டம் டெல்லி வரை எட்டும் என கருதுகிறோம்.

எனவே பக்தர்கள் 2 நாள் திருமலைக்கு வருவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ஐக்கிய ஆந்திராவுக்காக நடக்கும் எங்கள் போராட்டத்துக்கு வெளி மாநில பக்தர்கள் ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம் என்று கூறியுள்ளனர்.

திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்களையும் தடுத்து நிறுத்துவோம் என்று இவர்கள் முதலில் அறிவித்தனர். ஆனால் கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டதின் பேரில் அந்த முடிவை போராட்டக்குழுவினர் கைவிட்டனர். ஆனால் இரு சக்கர வாகனங்களில் சென்றால் தடுத்து நிறுத்துவோம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

TAGS: