தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், விவசாய விளைநிலங்களில் புகுந்து விளைபயிர்களை அழிக்கும் ஆறு காட்டுயானைகளின் கூட்டத்தைப் பிடித்து அவற்றை பழகு யானைகளாக மாற்றும் நடவடிக்கைகளை தமிழக வனத்துறை தற்போது மேற்கொண்டு வருகிறது.
“ஆபரேஷன் மாலை” என்று பெயரிடப்பட்டிருப்பதாக கூறப்படும் இந்த நடவடிக்கையின்படி, இந்த யானைக் கூட்டத்தில் உள்ள நான்கு ஆண் யானைகளையும், இரண்டு பெண் யானைகளையும் பிடித்து அவற்றை முதுமலை, டாப் ஸ்லிப் போன்ற இடங்களுக்கு கொண்டு சென்று பழகு யானைகளாக மாற்றுவதற்கான பயிற்சி கொடுக்க திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த யானைகளை மயக்க மருந்து கொடுத்து பிடிக்கும் நடவடிக்கைகள் துவங்கி நடந்துவரும் நிலையில் இந்த காட்டு யானைகளை பிடித்து பழகு யானைகளாக மாற்றுவது குறித்து சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் மற்றும் யானை பாதுகாப்பு ஆர்வலர்கள் மத்தியில் இருவேறு கருத்துக்கள் காணப்படுகின்றன.
இந்த குறிப்பிட்ட யானைத்தொகுதி மட்டும் அவற்றின் இயல்பான காட்டு உறைவிடத்தில் அவற்றுக்குத் தேவையான உணவு மற்றும் தண்ணீர் இருந்தும் அவை கடந்த இருபது ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் மனிதர் வாழும் பகுதிக்குள் நுழைந்து பயிர்களை அழிக்கும் செயலை தொடர்ந்து செய்யும் நிலையில், இவற்றை மீண்டும் மீண்டும் காட்டுக்குள் அனுப்பும் அரசின் முந்தைய நடவடிக்கைகள் பயன் தரவில்லை என்று கூறுகிறார்கள். இந்த பின்னணியில் இவற்றை பழகுயானைகளாக மாற்றுவதே சரியான நடவடிக்கை என்று கூறும் ஒரு பகுதி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தமிழக அரசுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்றும் வாதாடுகிறார்கள்.
ஆனால் மற்றொரு தொகுதி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தமிழக அரசின் இந்த முன் முயற்சி மிகவும் தவறு என்று விமர்சிக்கிறார்கள். கோவையில் உள்ள வன உயிர் ஆர்வலர் முகமது அலி தமிழக அரசின் இந்த முயற்சி சரியான அணுகுமுறையல்ல என்கிறார். அதிகரிக்கும் யானைகளின் எண்ணிக்கைக்கு ஈடுகொடுக்கும் விதமாக, அவற்றுக்குத் தேவையான காட்டுப்பகுதிகள் அதிகரிக்காததே, இப்படியான யானைகள் மனித வாழ்விடங்களில் பிரவேசிக்க முதன்மையான காரணம் என்று வலியுறுத்தும் முகமது அலி, இந்த அடிப்படை பிரச்சனையை அரசும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தீர்க்காதவரை இதுபோன்ற காட்டுயானைகள் மனித வாழ்விடங்களில் பிரவேசிக்கும் செயல்கள் தொடரும் என்றும் கூறுகிறார்.
யானைகளின் எண்ணிக்கைக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் வனப்பிரதேசத்தை அதிகப்படுத்தாமல், வெறுமனே காட்டு யானைகளை பழகு யானைகளாக மாற்றும் தமிழக அரசின் முடிவு மிகவும் தவறான ஒன்று என்றும் அவர் வாதாடுகிறார். -BBC