பொருளாதார ரீதியாக உலகின் நம்பிக்கையை இந்தியா இழந்துவிட்டது என்று தொழிலதிபர் ரத்தன் டாடா கூறினார்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சியால், இந்தியப் பொருளாதாரம் நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், ரத்தன் டாடா இவ்வாறு கருத்துக் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு புதன்கிழமை அளித்த பேட்டியில் இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பது:
பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவின் மதிப்பை சர்வதேச அளவில் மிக உயர்ந்த இடத்துக்கு எடுத்துச் சென்றார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், சமீபகாலமாக அந்த மதிப்பு சரிந்துள்ளது என்றார்.
பிரதமர் தொடர்ந்து மெüனம் காத்து வருவது முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது என்று கருதுகிறீர்களா? என்ற கேள்விக்கு, “உலகின் நம்பிக்கையை இந்தியா இழந்து வருகிறது. இதனை அரசு மிகவும் மெதுவாகவே புரிந்து கொண்டு வருகிறது. ஏற்கெனவே வகுக்கப்பட்ட கொள்கைகள், அதன்படியே முழுமையாக அமல்படுத்தப்பட்டால் நாட்டுக்கு நன்மை அளிப்பதாக இருக்கும்.
அரசு வெளியிடும் கொள்கைகளை தனியார் நிறுவனத்தினர் தங்கள் சுயலாபத்துக்காக மாற்றுகிறார்கள், அல்லது கொள்கைகள் அமலாக்கத்தை தாமதப்படுத்தும் வழிகளைத் தேடுகிறார்கள். இதுபோன்ற சக்திகளின் பிடியில் சிக்கி அரசு பின்வாங்குவதும் பிரச்னைகளுக்கு முக்கியக் காரணம் என்றார்.
1991-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை நினைவுகூர்ந்து பேசிய அவர், “அப்போது மிகவும் துணிச்சலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு சிலரின் நலன்களுக்கு முக்கியத்துவம் தராமல், ஒட்டுமொத்த இந்திய மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றார்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் தலைமைப் பண்பு மீதான எனது மதிப்பு எப்போதும் மிகவும் உயர்ந்ததாகவே உள்ளது. அதே நேரத்தில், முன்னின்று வழிகாட்டக்கூடிய தலைமை நாட்டில் இல்லை. பல இலக்குகளை நோக்கி அரசு செல்வதால் அதிக பிரச்னை உள்ளது.
கூட்டணிக் கட்சிகள் ஒரு பாதைக்கு இழுக்கின்றன என்றால், மாநில அரசுகள் வேறு பாதைக்கு அரசை இழுக்கின்றன. இப்போதைய சூழ்நிலையில் நமக்கு ஒரே நோக்கிலான குறிக்கோள் வேண்டும் என்று தெரிவித்தார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் தலைமைப் பண்பு குறித்த கேள்விக்கு, “குஜராத்தில் தனது தலைமைப் பண்பை மோடி நிரூபித்துவிட்டார். குஜராத் முக்கியமான இடத்தைப் பெற்றுவிட்டது. அவரால் நாட்டுக்கு என்ன செய்ய முடியும் என்ற கணித்துக் கூறும் நிலையில் நான் இல்லை’ என்றார் ரத்தன் டாடா.
இந்தியாவும் சீனாவும்தான் உலகின் அடுத்த பொருளாதார வல்லரசுகள் என உலகமே கூறிவந்தது. ஆனால் இப்போதைய நிலையில் சீனா இந்தியாவை மிஞ்சி எங்கோ சென்றுவிட்டது. ஊழல், கிழட்டு அரசியல்வாதிகளின் பதவி பேராசை, இன,மத ரீதியிலான பிரிவினை, சினிமா பைத்தியம் போன்ற காரணங்களால் இந்தியா இப்போது மிகவும் கேவலப்பட்டு நிற்கிறது.