இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாதி கைது

terroristஇந்தியாவில் பல்வேறு நகரங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்திய இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைத் தொடங்கியவர்களில் ஒருவரான யாசின் பட்கலை (30)(இடது) பிகார் மாநில போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.

அவருடன், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர்களில் ஒருவர் என்று கூறப்படும் ஹாதி என்ற அசதுல்லா அக்தர் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆமதாபாத், சூரத், பெங்களூரு, புணே, தில்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் குற்றம்சாட்டப்பட்டிருந்த யாசின் பட்கலை பல்வேறு மாநில காவல் துறையும் மத்திய உளவுத் துறையும் தீவிரமாகத் தேடி வந்தன.

துன்டாவின் துப்பு: இந்நிலையில், லஷ்கர் பயங்கரவாதி அப்துல் கரீம் துன்டாவை கடந்த 16-ஆம் தேதி இந்திய-நேபாள எல்லையில் தில்லி போலீஸ் கைது செய்தது.

போலீஸ் காவலில் அவரிடம் விசாரணை நடத்தியபோது, இந்தியாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக அவர் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். இந்தியா தேடும் பயங்கரவாதிகள் ஹஃபீஸ் சயீத், தாவூத் இப்ராஹிம் உள்ளிட்டோர் பாகிஸ்தானில் இருப்பதை உறுதிப்படுத்தி துன்டா சில தகவல்களை வெளியிட்டதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், இந்திய-நேபாள எல்லையில் யாசின் பட்கல் பிடிபட்டார். இதுகுறித்து மத்திய உள்துறை உயரதிகாரி கூறியது:

கர்நாடக மாநிலம், பட்கலைச் சேர்ந்தவர் யாசின் பட்கல். 2008-ஆம் ஆண்டில் தனது சகோதரர் ரியாஸ் பட்கல், இக்பால் பட்கல் தொடங்கிய “இந்தியன் முஜாஹிதீன்’ இயக்கத்தில் இணை அமைப்பாளராக இருந்தார்.

பாகிஸ்தானில் பயிற்சி: 1992-ஆம் ஆண்டு அயோத்தியில் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்புச் சம்பவம், 2002-ஆம் ஆண்டில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தை இவர்கள் தொடங்கினர்.

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற மூவரும் இந்தியாவில் இளைஞர்களை மூளைச் சலவை செய்து, இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுக்க தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

தில்லியின் பட்லா ஹவுஸ் பகுதியில் யாசின் பட்கல் 2008-ஆம் ஆண்டில் வசித்து வந்தார். அந்தப் பகுதியில் போலீஸார் என்கவுன்ட்டர் நடத்தியபோது அங்கிருந்து வெளியேறினார். பின்னர், தமது சகோதரர்களுடன் சேர்ந்து கொண்டு நாட்டின் பல்வேறு நகரங்களில் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டார். 2009-ஆம் ஆண்டில் யாசின் பட்கல் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். ஆனால், அவரை நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது. அதன்பிறகு, அவர் தலைமறைவானார்.

வங்கதேசத்தில் நடமாட்டம்: இந்நிலையில், யாசின் பட்கல் பிகார் மாநில எல்லை மாவட்டங்கள் வழியாக நடமாடுவதாக மத்திய உளவுத் துறைக்குத் தகவல் கிடைத்தது. அடிக்கடி வங்க தேசம், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு அவர் சென்று வருவதாகவும் தெரிய வந்தது. இதையடுத்து, எல்லையோர மாவட்டங்களில் கடந்த ஆறு மாதங்களாக மத்திய உளவுத் துறையினர் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர். பிகார் மாநில காவல் துறையின் உயரதிகாரிகளின் அனுமதியுடன் யாசின் பட்கலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்திய-நேபாள எல்லையில் கைது:

இந்நிலையில், பிர்கஞ்ச் மாவட்டம் வழியாக வங்கதேசம் செல்வதற்காக யாசின் பட்கல் புதன்கிழமை மாலையில் வந்தார்.

அதுகுறித்து நேபாள உளவுத் துறையினர் இந்திய உளவுத் துறைக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து, பிகாரின் கிழக்கு சாம்ப்ரான் மாவட்டத்துக்கு அவர் வந்தபோது உளவுத் துறையினரிடம் பிடிபட்டார்.

தனிப் படையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தன்னை யுனானி மருத்துவர் என்று கூறி யாசின் பட்கல் தப்ப முயன்றார்.

ஆனால், அவரைப் பற்றியும் அவரது அடையாளத்தையும் ஏற்கெனவே உளவுத் துறையினர் அறிந்திருந்ததால் பிகார் காவல் துறையினரிடம் யாசின் பட்கல் ஒப்படைக்கப்பட்டார்’ என்று மத்திய உள்துறை அதிகாரி கூறினார்.

தில்லி கொண்டு வர நடவடிக்கை:

இதையடுத்து, “மோதிஹரி மாவட்ட முதன்மை மாஜிஸ்திரேட் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தி தில்லிக்கு தனி விமானத்தில் கொண்டு வர போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்’ என்று பிகார் மாநில காவல் துறை இயக்குநர் அபயானந்த் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறினார்.

மத்திய அரசு உறுதி: யாசின் பட்கல் கைது செய்யப்பட்டதை, தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே உறுதிப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து, உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங் கூறியது:

அண்மையில் தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட அப்துல் கரீம் துன்டாவைவிட யாசின் பட்கல் மிகவும் தீவிரமான பயங்கரவாதி. சட்டப்படி இதுபோன்ற குற்றவாளிகளுக்குக் கடுûமாயான தண்டனை கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்’ என்றார்.

TAGS: