கச்சத் தீவை திரும்பப் பெற முடியாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

Kachchatheevu“இந்திய-இலங்கை கடல் பகுதியில் சர்வதேச எல்லைக் கோட்டை நிர்ணயித்த போது, கேட்பாரற்றுக் கிடந்த கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டில் இருந்ததால் அது அந்நாட்டுக்கே சொந்தமாகிவிட்டது’ என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா- இலங்கை இடையே 1974-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். சௌகான், எஸ்.ஏ. பாப்டே அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் மீது ஜெயலலிதா பதிலளிக்க மூன்று வாரங்கள் அவகாசமும், இந்த வழக்கில் தமிழக வருவாய்த் துறையை பிரதிவாதியாக சேர்க்க அனுமதி வழங்கியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக, கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக சில நாள்களுக்கு முன்பு மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் கூறியிருப்பதாவது:

கச்சத்தீவு எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாமல் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கச்சத்தீவுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்னை இந்தியா-இலங்கை இடையே நீடித்து வந்தது.

அதைத் தொடர்ந்து, இந்திய-இலங்கை கடல் பகுதியில் சர்வதேச எல்லைக் கோட்டை நிர்ணயித்தபோது கச்சத்தீவு இலங்கை வரம்புக்குள் சென்றுவிட்டது.

அதன்பிறகு, 1974-ஆம் ஆண்டில் இந்தியா- இலங்கை இடையே கச்சத்தீவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

1976-ஆம் ஆண்டில் இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலும், கச்சத்தீவு இலங்கையின் பகுதியில் இருப்பதை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்திய எல்லைக்கோட்டுக்குள் இருந்த கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்ததாக மாயை ஏற்படுத்தப்படுவது தவறானது.

எனவே, ஜெயலலிதா தாக்கல் செய்த மனு ஏற்படையது அல்ல. அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

தமிழக மீனவர்களுக்கு உரிமை கிடையாது: கச்சத்தீவில் உள்ள ஆலயத்துக்கு சுற்றுலா சென்று வருவதற்கு மட்டும்தான் இந்தியர்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.

அந்தத் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் மீன்பிடிக்கும் உரிமை தமிழகத்துக்குக் கிடையாது.

இருந்தபோதும், மீன் பிடிக்கும்போது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை விடுவிக்க அவ்வப்போது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்களுக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், கச்சத்தீவு தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாடு சர்ச்சையை தீவிரப்படுத்தியுள்ளது.

TAGS: