கச்சத் தீவை மீட்க வேண்டும்: அதிமுக

thambi_duraiஇலங்கைக் கடற்படையால் தாக்குதலுக்குள்ளாகி சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்களைக் காக்க அந்த நாட்டின்வசம் உள்ள கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று மத்திய அரசை மக்களவையில் அதிமுக உறுப்பினர் எம். தம்பிதுரை வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக மக்களவையில் வெள்ளிக்கிழமை அவர் பேசியது:

ராமநாதபுரம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 35 அப்பாவித் தமிழர்களை இலங்கைக் கடற்படை கடந்த 26-ஆம் தேதி சட்டவிரோதமாக சிறைபிடித்துச் சென்றது.

கடந்த ஜூலை 30, 31 ஆகிய நாள்களில் இரு வேறு சம்பவங்களில் 36 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை சிறைபிடித்துச் சென்றது. இவ்வாறு மொத்தம் 112 தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அந்த நாட்டுக் கடற்படையினரின் கொடுமைகள் குறித்து பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பல முறை கடிதங்கள் எழுதினார். ஆனால், ஒரு முறை கூட மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நடவடிக்கைக்குத் தீர்வு காண கச்சத்தீவை மீட்பதே சரியான தீர்வாகும்.

நாடாளுமன்றத்தைக் கலந்து ஆலோசிக்காமலேயே இலங்கைக்கு கச்சத்தீவை மத்திய அரசு தாரைவார்த்துக் கொடுத்தது. இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். பாகிஸ்தானில் இந்திய மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படும்போது மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுத்து அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கிறது.

ஆனால், தமிழக மீனவர்கள் விவகாரத்தில் அத்தகைய அணுகுமுறையைக் காண முடியவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு இலங்கைக்கு சார்பாகச் செயல்படக் கூடாது’ என்று தம்பிதுரை வலியுறுத்தினார்.

“நாடாளுமன்றத்தில் விவாதம் கூடாது’: இதனிடையில், கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதிக்கக் கூடாது என்று மக்களவைத் தலைவர் மீரா குமாருக்கு வெளியுறவுத் துறை கடிதம் அனுப்பியுள்ளது.

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று திமுக உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் அவை விதி 193-இன் கீழ் நோட்டீஸ் அளித்துள்ளார்.

வழக்கமாக இத்தகைய நோட்டீஸ் மீது உறுப்பினர்கள் பேச அனுமதிக்கப்பட்டால் அவர்கள் எழுப்பும் பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் பதில் அளிக்க வேண்டும்.

இந்நிலையில், மக்களவைத் தலைவர் மீரா குமாருக்கு வெளியுறவுத் துறை அனுப்பியுள்ள கடிதத்தில் “கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியா இலங்கை இடையே பல ஆண்டுகளுக்கு முன்பு தீர்வு காணப்பட்டு விட்டது.

அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதித்தால் நட்பு நாடான இலங்கையுடன் இந்தியா கொண்டுள்ள நல்லுறவு பாதிக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.

மக்களவை மட்டுமன்றி மாநிலங்களவையிலும் அவ்வப்போது தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக, இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள் கச்சத்தீவு விவகாரத்தை எழுப்பி வருகின்றனர்.

ஆனால், அவைக்குள் அது தொடர்பான அரசின் நிலை இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.

TAGS: