இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கவும், இலங்கை மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் மீன்பிடிக்கவும் இருநாடுகளுக்கிடையில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டுமென காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே எஸ் அழகிரி இலங்கை ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இவரது இந்த கோரிக்கையை இந்திய பிரதமர் வாயிலாக இலங்கை அரசுக்கு தெரியப்படுத்தும்படியும், தாமும் இது குறித்து இலங்கை அரசிலுள்ள மற்றவர்களிடமும் இலங்கை மீனவர்களிடமும் கலந்துபேசுவதாக மஹிந்த தம்மிடம் தெரிவித்ததாகவும், கே எஸ் அழகிரி தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சவுமியமூர்த்தி தொண்டமானின் நூற்றாண்டுவிழாவில் கலந்துகொள்வதற்காக இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் அழைப்பின்பேரில் இலங்கை சென்றிருப்பதாக தெரிவித்த அழகிரி, இந்த கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள வந்திருந்த மஹிந்த ராஜபக்ஷவை தாம் சந்தித்து பேசியபோது இந்த கோரிக்கையை வைத்ததாக கூறினார்.
எல்லை தாண்டிவந்து மீன்பிடித்த குற்றச்சாட்டின்பேரில் தமிழக மீனவர்கள் இலங்கை சிறையிலும், இலங்கை மீனவர்கள் இந்திய சிறைகளிலும் வாடுவதை தடுக்கவேண்டுமானால், மாதம் 15 நாள் இருநாட்டு மீனவர்களும் பரஸ்பரம் அடுத்த நாட்டு கடற்பரப்பில் மீன்பிடிக்க வகை செய்யும் ஒப்பந்தம் ஏற்படுத்துவது சரியான தீர்வாக இருக்கும் என்று தாம் மஹிந்தவிடம் தெரிவித்ததாக அழகிரி கூறினார்.
இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை நேரில் சென்று சந்தித்ததாக தெரிவித்த அழகிரி, அவர்களின் விடுதலைக்கான சட்டரீதியிலான முன்னெடுப்புக்களையும் தாம் மேற்கொண்டதாகவும் கூறினார். -BBC