சேதுத் திட்டம்: காங்கிரஸூக்கு கருணாநிதி எச்சரிக்கை

karunanidhiசேது சமுத்திரத் திட்டத்தை காங்கிரஸ் (மத்திய அரசு) நிறைவேற்றாவிட்டால், அதன் கையை திமுக விட்டுவிடும் என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் மெகா கூட்டணியை தி.மு.க. அமைக்கப் போவதாகவும் அவர் சூசகமாகத் தெரிவித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த தின பொன் விழா ஆண்டின் நிறைவு விழா சென்னை காமராஜர் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் கருணாநிதி பேசியது:

“கை’ விடப்படும்: சேது சமுத்திரத் திட்டம் ரூ.2,457 கோடியில் தொடங்கப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார். இந்தத் திட்டம் நிறைவேறும் சூழலில், முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றார்.

இது தமிழர் நலன் மீது அக்கறை உள்ள செயல் இல்லை.

ஆனால், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. இதற்கு மத்திய அரசு இன்னும் இணக்கம் தெரிவிக்கவில்லை. சேதுத் திட்டத்தைக் கைவிடாதீர்கள் என்று மத்திய அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் வரை காத்திருப்போம். ஒருவேளை, சேதுத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டால், நாங்களும் உங்கள் (காங்கிரஸ்) கையை விட்டு விடுவோம்.

இது ஒன்றும் பயமுறுத்தல் இல்லை. பாசத்தின் காரணமாக விடுக்கும் எச்சரிக்கை.

தமிழர்கள் வாழ வேண்டும், வாணிபம் செழிக்க வேண்டும் என்றால் சேது திட்டம் கட்டாயம் வேண்டும்.

மக்களவைத் தேர்தல்: திமுகவோடு விடுதலைச் சிறுத்தைகள் போன்ற தோழமை இயக்கங்கள் எல்லாம் சேர்ந்துதான் மக்களவைத் தேர்தலில் வெற்றியை நிலை நிறுத்த வேண்டும். அதியமான் ஒüவைக்கு நெல்லிக்கனி கொடுத்ததுபோல, விழாவில் எனக்கு தங்க நெல்லிக்கனி கொடுக்கப்பட்டது. இது தங்கக்கனி (வி.சிறுத்தைகள்) என்பதால் என்னிடத்திலே தங்கட்டும் என்று அறிவாலயத்தில் உள்ள கருவூலத்தில் சேர்த்து விடுவேன்.

தங்கம் விலை ஏறினாலும் இறங்கினாலும் இதை ஒன்றும் அசைக்க முடியாது, இது அப்படியே இருக்கும். விற்கவோ, வாங்கவோ முடியாது. ஏனெனில், இது திமுகவின் சொத்து.

விடுதலைச் சிறுத்தைகள் திமுகவை விட்டுப் பிரியப் போவதுமில்லை. பிரிய விடப் போவதுமில்லை.

இந்தக் கூட்டத்தில் திருமாவளவன் தன் வேதனைகளைப் பட்டியலிட்டார். என்னுடைய பட்டியல் (கூட்டணிக் கட்சிகள்) மிக நீளமானது என்பதை அவருக்குக் கூறிக் கொள்கிறேன்.

இது திருமாவளவனுக்கும் தெரியும். தெரிந்த காரணத்தால்தான் அந்தப் பட்டியலோடு திருமாவளவன் போட்டி போடுகிறார். திமுகவை அதன் தோழமைக் கட்சிகளோடு சேர்ந்து அழித்துவிடலாம் என சில தலைவர்கள் மனப்பால் குடிக்கின்றனர். அது நடக்காது.

“மணிமேகலை’ திட்டம்: உணவுப் பாதுகாப்பு மசோதாவை ஆதரித்ததன் மூலம் மக்களை திமுக ஏமாற்றிவிட்டதாக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார். உணவு மசோதாவை எதிர்க்கிறோம் என்று கூறுபவர்கள் மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்ற போது எதிர்ப்பதாகக் கூறி, வெளிநடப்புச் செய்திருக்க வேண்டும். அதைவிட்டு, மதோசா நிறைவேற்றப்பட்டபோது கையொலி எழுப்பிவிட்டு, வெளியில் வந்து எதிர்ப்பதாகக் கூறுகின்றனர். இது 70 கோடி மக்கள் பயன்பெறும் திட்டம். அதனால்தான் “மணிமேகலை’ திட்டம் எனக் கூறுகிறேன். தமிழக அரசு ஏழைகளுக்காகப் பாடுபடும் ஆட்சியாக இல்லை. எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் ஆட்சியாக உள்ளது.

நம்மை (திராவிடக் கட்சிகள்) தொடவே மாட்டோம் என்று கூறிய தலைவர் (ராமதாஸ்)கூட, அரசுக்கு எதிராக நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று எனக்கு கடிதம் எழுதும் அளவுக்கு நிலைமை உள்ளது. எல்லோரும் சேர்ந்துதான் இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்றார் கருணாநிதி.

முன்னதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருமாவளவனின் பிறந்த நாள் பொன்விழாவை முன்னிட்டு பரிசாக அளிக்கப்பட்ட 51 பவுன் தங்கச் சங்கலியை திமுக தலைவர் கருணாநிதி அணிவித்தார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கவிஞர் அப்துல் ரகுமான், பேராயர் எஸ்றா சற்குணம், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு, திமுக துணை பொதுச் செயலாளர் துரைமுருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார், சிந்தனைச் செல்வன் உள்பட ஏராளமானோர் விழாவில் பங்கேற்றனர்.

TAGS: