இந்தியாவில் வரதட்சணைக் கொடுமை: மணிக்கொரு மரணம்

india_weddingஇந்தியாவில் சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண் வரதட்சணைக் கொடுமை காரணமாக உயிரிழப்பதாக உத்தியோகப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இந்தியா எங்கிலும் பார்க்க 2012ஆம் ஆண்டில் வரதட்சணைக் கொடுமை சம்பந்தமான உயிரிழப்புகளாக 8233 சம்பவங்கள் பதியப்பட்டுள்ளதாக தேசிய குற்றச் சம்பவ பதிவு அலுவகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

2007 ஆண்டு முதல் இந்த எண்ணிக்கை எட்டாயிரத்துக்கும் கூடுதலாகவே இருந்துவந்துள்ளது என்றும் தெரியவருகிறது.

தவிர 2007க்கும் 2011க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வந்துள்ளது.

வரதட்சணைக் கொடுமையால் பெண்கள் இறந்ததாக குற்றம்சாட்டப்படும் சம்பவங்களில் சராசரியாக 35 சதவீத வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

திருமண விஷயத்தில் பெண்ணை ஒரு பரிவர்த்தனைப் பொருளாகவே பார்க்கும் சமூக மனப்பாங்கு இந்தியாவில் இன்னும் பெரிதாக மாறியிருக்கவில்லை என தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட எழுத்தாளரும் பெண்ணுரிமை ஆர்வலருமான கீதா கூறினார்.

இந்தியாவில் வரதட்சணை ஒழிப்பு சட்டம் 1961ஆம் ஆண்டே அமலுக்கு வந்துவிட்டாலும் இன்றளவும் சாவு எண்ணிக்கை அதிகமாக இருப்பது, சட்டம் இருந்தும் இல்லாத ஒரு நிலையையே காட்டுவதாகவும், சட்டத்தை நடைமுறைப்படுத்தவும், சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞரான ஆர் வைகை தெரிவித்தார். -BBC

TAGS: