கச்சத்தீவு தொடர்பாக இந்தியா- இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு முழு ஈடுபாட்டுடன் செயல்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். தமிழக மீனவர் பிரச்னையில் மத்திய அரசு அலட்சியம் காட்டி வருவதாக தமிழக எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்துப் பேசினர்.
கச்சத்தீவு, தமிழக மீனவர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் திங்கள்கிழமை சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேச உறுப்பினர்களுக்கு துணைத் தலைவர் பி.ஜே.குரியன் அனுமதி வழங்கினார். அதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் பேசியது:
வா.மைத்ரேயன் (அதிமுக): தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தை பல முறை அவையிலும், மத்திய அரசிடமும் நாங்கள் முறையிட்டுள்ளோம். ஆனால், அவர்களின் நலன்களைப் பாதுகாக்க மத்திய அரசு இதுவரை எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமருக்கும் தமிழக முதல்வர் கடிதம் எழுதினார். ஆனால், எந்தப் பலனும் இல்லை. இந்த நிலையில், கச்சத்தீவு தொடர்பாக மத்திய அரசு கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்ட விஷயம் தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
கச்சத்தீவை இலங்கைக்கு மத்திய அரசு கொடுக்கவில்லை என்று பிரமாண பத்திரத்தில் கூறியிருப்பது தமிழ்நாட்டை ஏமாற்றுவதற்கும் சமம். இந்த விவகாரத்தில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் ராஜதந்திர உத்திகளைக் கையாள மத்திய அரசுக்குத் தெரியவில்லை. நாட்டை ஆளும் காங்கிரஸ் கட்சி ஜமீன்தார் போலச் செயல்படுகிறது. தமிழ்நாட்டுக்கு எதிராகவே எப்போதும் உள்ளது. அந்தக் கட்சிக்கு தமிழக மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்.
கனிமொழி (திமுக): இலங்கைந்க் கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த 194 மீனவர்கள் கடந்த சில மாதங்களாக சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் அந்த நாட்டு சிறையில் உள்ளனர். நடுக்கடலில் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமை தமிழக மீனவர்களுக்கு இலங்கைக் கடற்படையால் மறுக்கப்படுகிறது. எனவே, கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இதே கோரிக்கையை திமுக தலைவர் கருணாநிதியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
து.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்): கச்சத்தீவு தொடர்பான மத்திய அரசின் பிரமாண பத்திரத்தை நாங்கள் கடுமையாக ஆட்சேபிக்கிறோம். கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பித்து இந்திய மீனவர்களின் உரிமைகள் குறித்துப் பேச்சு நடத்த வேண்டும். இலங்கைக் கடற்படையால் தாக்கப்படும் மீனவர்களை தமிழராகக் கருதாமல் இந்தியராகக் கருத வேண்டும்.
வெங்கய்ய நாயுடு (பாஜக): தமிழக உறுப்பினர்கள் எழுப்பும் மீனவர் பிரச்னையும், கச்சத்தீவு விவகாரமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி மத்திய அரசு விவாதிக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்றார்.
மேற்கண்ட உறுப்பினர்களின் கருத்துகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், பாஜக மூத்த உறுப்பினர் நஜ்மா ஹெப்துல்லா ஆகியோர் வரவேற்றனர். கனிமொழி தெரிவித்த சில கருத்துகளை புதுச்சேரி காங்கிரஸ் உறுப்பினர் கண்ணன், திமுக உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி ஆதரிப்பதாகக் கூறினர். காங்கிரஸ் நியமன உறுப்பினர் மணிசங்கர் ஐயர் பேசுகையில், “கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பாக இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத் திருத்தங்களை அமல்படுத்த வேண்டும்’ என்றார்.
வணக்கம்.
சோனியாகாந்தி ஆட்சியில் இப்படிதான் நடக்கும். நல்ல வேலையாக நாம் முழித்து கொண்டோம். சோனியாகாந்தி மலேசியா வரமுடியாத அளவு எதிர்ப்பு இருக்கிறது. தமிழ் நாட்டு மக்களும் முழித்து கொண்டு வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்ப்பை காட்ட வேண்டும். செய்வார்களா?