எல்லையில் மோதல்களைத் தவிர்க்க இந்தியா-சீனா பேச்சுவார்த்தை

india_-_china_soldiers1எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் மோதல்களைத் தவிர்க்க ஓர் வழிமுறையை உருவாக்குவது தொடர்பாக இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்துள்ளார்.

மிக அதிக எடை கொண்ட ராணுவத் தளவாடங்களையும் கொண்டு செல்லக் கூடிய அதிநவீன சி-17 குளோப்மாஸ்டர்-3 விமானத்தை அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்கியது. இவ்வகையைச் சேர்ந்த மேலும் 9 விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து இந்திய விமானப்படை வாங்க உள்ளது. இந்த விமானம் சுமார் 70 டன் எடை கொண்ட பொருள்களையும், 150 வீரர்களையும் சுமந்து செல்லும் திறன் வாய்ந்ததாகும்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹிண்டனில் உள்ள இந்திய விமானப்படைத் தளத்தில் இந்த விமானத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி திங்கள்கிழமை முறைப்படி விமானப்படையில் சேர்த்தார். அதன் பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாகவே, இந்திய, சீனராணுவத்துக்கு இடையே சமீபத்தில் துரதிருஷ்டவசமாக மோதல் ஏற்பட்டது.

இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே மேலும் அதிக அளவில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராஜீய வழியிலான முயற்சிகள் தவிர, ராணுவ நிலையிலும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இரு நாட்டு எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளிடையே அதிக அளவில் கூட்டங்களை நடத்துவது மற்றும் பல்வேறு நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து இரு நாடுகளும் பரிசீலித்து வருகின்றன.

சில நடவடிக்கைகள் ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ளன. சில நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்பட உள்ளன. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் மோதல்களைத் தவிர்க்க ஓர் வழிமுறையை உருவாக்குவது தொடர்பாக இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ராணுவம் சுதந்திரமாகச் செயல்படுகிறது. சீன ஊடுருவல் போன்ற சம்பவங்களை அது திறம்படக் கையாள்கிறது என்றார் ஏ.கே.அந்தோனி.

TAGS: