குழந்தைகளுக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங்கள் 12% உயர்வு

save_girl_childகுழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் 12 சதவீதம் உயர்ந்துள்ளது.

குழந்தைகளுக்கு எதிராக தேசிய அளவில் 2012-ஆம் ஆண்டில் 38,172 குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 1036 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

2011-ஆம் ஆண்டோடு, 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவங்களை ஒப்பிடும்போது 15.3 சதவீதம் குற்றங்கள் அதிகரித்துள்ளன.

மேலும் 2011-இல் நடந்த மொத்த குற்றச் சம்பவங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2.7 சதவீதம் அளவில் இருந்துள்ளது. ஆனால், 2012-இல் 8.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தமிழக நிலவரம்: தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிராக 925 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. 2012-இல் 1036 சம்பவங்களாக அதிகரித்துள்ளன. அதாவது 12 சதவீதம் அளவுக்கு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. 2012-இல் நடந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில், குழந்தைக் கடத்தல் சம்பவங்கள் 47.9 சதவீதமாகும். பாலியல் குற்றங்கள் 22.4 சதவீதமாகும். பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக குழந்தைகள் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் 4.2 சதவீதமாகும்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்வதில் தேசிய அளவில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. தமிழகம் 12-ஆவது இடத்தில் உள்ளது.

இருப்பினும் தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற குற்றச் சம்பவங்களோடு 2012-ல் நடந்த குற்றங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன.

குறிப்பாக சென்னையில் 83 குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளன. இதேபோல கோயம்புத்தூரில் 23, மதுரை 37, திருச்சிராப்பள்ளி 13 என குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் நடந்துள்ளன.

பெருநகரங்களில் அதிகரிப்பு: தமிழகத்தைப் பொருத்தவரையில் கிராமப்புறங்களைக் காட்டிலும் பெருநகரப் பகுதிகளிலேயே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள், பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்கள் அதிகமாக நடைபெறுகின்றன.

மாநிலத்தில் 2012-ல் 6 சிசுக் கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதேபோல பாலியல் தொந்தரவு, பாலியல் பலாத்காரம், குடும்பத் தகராறு, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 292 குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 576 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

குற்றங்களுக்குக் காரணம்: குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோரும், காப்பாளரும் புகார் தர தயாராக இருந்தும் காவல்துறை பெறுவதில்லை. இது குற்றவாளிகளை மேலும் குற்றம் செய்யத் தூண்டுகிறது. பல்வேறு நெருக்கடிக்களுக்கு பின்னர் வழக்குப் பதியப்பட்டாலும் விசாரணை முறையாகவும், வேகமாகவும் நடைபெறுவதில்லை என புகார் கூறப்படுகிறது.

இதற்கு உதாரணமாக 2011-ஆம் ஆண்டு 1407 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன.

இந்த எண்ணிக்கை 2012-இல் 1708 வழக்குகளாக அதிகரித்துள்ளதாக காவல் துறை புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இதன் விளைவாக குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுகிறவர்கள் எளிதாக நீதிமன்ற தண்டனையில் தப்பிவிடுவதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பெற்றோர் பாதுகாப்பு அவசியம்: அண்மைக் காலமாக குழந்தை வளர்ப்பில் பெற்றோர் கவனம் குறைந்து வருவதாலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பெற்றோரின் அரவணைப்பு இல்லாமலும், பாதுகாப்பு இல்லாமலும் வளரும் குழந்தைகள் அன்னியர்களின் பாலியல் தொந்தரவுக்கு எளிதாக இலக்காகி விடுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபடுகிறவர்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமான பேர் உறவினராகவோ அல்லது நண்பர்களாகவோ இருக்கின்றனர் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தச் சம்பவங்கள் வெளியே தெரிந்தால் தங்களுக்கு அவமானம் என குழந்தையின் பெற்றோரும், குடும்பத்தினரும் உண்மையை மூடி மறைத்து காவல் நிலையங்களில் புகார் செய்வது கிடையாது. இக்காரணங்களால் உண்மையில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்களைவிட பாதிக்கும் குறைவான அளவிலேயே காவல் நிலையங்களுக்கு புகார்கள் வருகின்றன. அங்கும் பாதிக்கும் மேற்பட்ட புகார்கள் முதல்கட்ட விசாரணையிலேயே பேசி முடித்து புகார்தாரர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

இதன் விளைவாக குற்றவாளிகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்டனை கிடைக்காமலே சென்றுவிடுகிறது. இதேபோன்று பல்வேறு வகைகளில் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்ப வைக்கப்படுவதால், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன என குழந்தைகள் நல ஆர்வலர்களால் கூறப்படுகிறது.

TAGS: