தனது மனைவியை கொலை செய்ய, காமகொடூரன் ஜெய்சங்கரை தப்பிக்க வைத்த ஜெயில் அதிகாரி?

jeyashaker_001பெங்களூர் சிறையில் இருந்து ஜெய்சங்கர் தப்பிச்செல்வதற்கு, ஜெயில் அதிகாரி ஒருவர் உடந்தையாக இருந்ததாக கருதப்படுகிறது.

கள்ளக்காதலனுடன் ஓடிய அவருடைய மனைவியை தீர்த்துக்கட்டுவதற்காக ஜெய்சங்கரை அவர் அனுப்பினாரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவன், ஜெய்சங்கர் (வயது 36). காமக்கொடூரனான இவன் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் பல பெண்களை கற்பழித்து கொன்றவன். கர்நாடக போலீசார் அவனை கைது செய்து, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்து இருந்தனர்.

கடந்த சனிக்கிழமை நள்ளிரவில், சிறையில் ஜெய்சங்கர் தப்பி ஓடிவிட்டான் அவன் தப்பில் சென்ற முறை குறித்து ஜெயில் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்கள் முரண்பாடாக உள்ளதால், ஜெயில் அதிகாரிகளே அவன் தப்பிச் செல்ல உதவியாக இருந்தனரா? என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் மனநல சிகிச்சை பெற்று வந்த ஜெய்சங்கர், ஆஸ்பத்திரி கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள அறையில்தான் அடைக்கப்பட்டு இருந்தான். கள்ளச்சாவி போட்டு அறையின் பூட்டை திறந்து தப்பியதாக கூறப்பட்டது.

ஆனால், சிறை அறையில் உள்ள இரும்புக்கதவுக்கு வெளியே சுவரின் பக்கவாட்டில் குறைந்த பட்சம் 4 அடி தூரத்தில் பெட்டி போன்ற பகுதியில் தான் பூட்டு போடப்பட்டு இருக்கும். உள்ளே இருந்து திறப்பது என்றால், குறைந்தது கையின் நீளம் 4 1/2 அடி இருப்பதுடன், 360 டிகிரி அளவுக்கு கையை சுழற்ற வேண்டியது இருக்கும்.

எனவே உள்ளே இருந்து அவன் பூட்டை திறப்பது என்பது இயலாத காரியம். இதை உறுதி செய்வது போல், தப்பிச் செல்வதற்கு முன்பாக மாலை 6 மணி அளவிலேயே ஜெய்சங்கரை ஜெயில் ஊழியர்கள் சிலர் வைத்தியசாலை கட்டிடத்தின் மேல் தளத்துக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

சில மணி நேரம் மேல் பகுதியில் மறைந்து இருந்த அவன், நள்ளிரவில் வெளியே வந்து பக்கத்தில் இருந்த 20 அடி உயர சுவரில் ஏறி தப்பிஇருக்கிறான். இரும்புக்கம்பியை சுவரில் சாய்த்து தப்பியதாக கூறப்பட்டாலும், அவன் ஒருவனாக அந்த கம்பி வழியாக ஏறிச்சென்று இருக்க முடியாது.

கீழ்பகுதியில் ஒருவர் கம்பியை உறுதியாகப் பிடித்துக்கொண்டால்தான் அவனால் அதன் மீது ஏறி மேல் பகுதிக்குச் சென்று இருக்க முடியும். இதற்காக மூங்கில் கம்புகள் மற்றும் கயிறுகளும் வழங்கப்பட்டதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.

அடுத்து 20 அடி சுவரில் இருந்து குறுக்காக கட்டப்பட்டு இருந்த 1 1/2 அடி அகல சுவரில் அவன் நடந்து சென்று இருக்கிறான். கண்ணாடி துண்டுகள் பதிக்கப்பட்டு இருந்த அந்த சுவர் பகுதியில் ரத்தக்கறை எதுவும் இல்லை. எனவே நிச்சயம் அவனுக்கு ‘ஷூ’ அல்லது பாதுகாப்பான கவசங்கள் வழங்கப்பட்டது உறுதியாகிறது.

அடுத்து போலீஸ் சீருடையில் தப்பியதாக கூறப்படுகிறது. அப்படி சென்றதை பார்த்தது யார்? ஊழியர்கள் பார்த்து இருந்தால், அதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பது போன்ற சந்தேகங்கள் எழுகின்றன.

மாலை 6 மணிக்கு மேல் தளத்திற்கு சிலர் ஜெய்சங்கரை கூட்டி வந்தபோது அவன் சீருடையில் இருந்ததை பார்த்ததாக சிலர் கூறி இருந்தனர். எனவே, பொலிஸ் சீருடையை உள்ளே இருந்தவர்கள்தான் அவனுக்கு கொடுத்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.

அத்துடன் காம்பவுண்டு சுவரில் உள்ள மின்சார வேலியில் மின்சாரம் பாய்வதை தடுப்பதற்காக, திட்டமிட்டு மின்சாரம் நிறுத்தப்பட்டு உள்ளது. வழக்கமாக ஜெயிலுக்குள் அதுவும் குறிப்பாக அங்குள்ள வைத்தியசாலை வளாகத்தில் மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது.

எதிர்பாராதவிதமாக மின்சாரத்தடை ஏற்பட்டாலும் அடுத்த சில வினாடிகளில் மின்சாரம் வந்துவிடும். ஆனால், ஜெய்சங்கர் தப்பிச்சென்ற அன்று யாரோ ஒருவர் மின் வினியோக பிரதான ‘சுவிட்சை’ நிச்சயம் அணைத்திருக்க வேண்டும் என்றும், அது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அந்த ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கும் கைதிகளை பார்க்க வரும் பார்வையாளர்களிடம் தலா ரூ.200 வீதம் மாமூல் வசூலிப்பது வாடிக்கை. வெளியில் இருந்து கொண்டு வரும் உணவை கொடுப்பது என்றால் அதற்கு கூடுதல் பணம் கொடுக்க வேண்டும்.

இதுபோன்று வசூலாகும் பணத்தை ஜெயில் அதிகாரிகள் வார இறுதி வேலை நாளான சனிக்கிழமை அன்று மாலையில் பங்கு பிரித்துக்கொள்வது வழக்கம். அப்போது விருந்தும் நடைபெறும். ஜெய்சங்கர் தப்பிச்சென்ற அன்று, அதிகாரி ஒருவர் ஓய்வு பெற்றதையொட்டி மதுவிருந்தும் நடைபெற்று இருக்கிறது.

இதுவும் ஜெய்சங்கர் தப்பிச் செல்வதற்கு சாதகமான அம்சமாக அமைந்துவிட்டது. அடுத்து எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல் பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

அந்த ஜெயில் அதிகாரி ஒருவரின் மனைவி அவருடைய கள்ளக்காதலனான பொலிஸாருடன் (ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவரின் டிரைவர்) ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், தனது மனைவியையும், கள்ளக்காதலனையும் பழிவாங்குவதற்காக அந்த அதிகாரி சமயம் பார்த்துக்கொண்டு இருந்தார்.

அந்த அதிகாரிதான் தனது மனைவியையும் கள்ளக்காதலனையும் தீர்த்துக்கட்ட, இதுபோன்ற குற்றங்களில் கைதேர்ந்தவனான ஜெய்சங்கரை பயன்படுத்த திட்டமிட்டு அவன் தப்பிச்செல்ல உதவி இருக்கலாமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

கர்நாடக மாநில பொலிஷ’ ஐ.ஜி. லால் லோகுமா பச்சாவுவிடம், இதுபோன்ற சந்தேகங்கள் குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், “தற்போதைய நிலையில் அது குறித்து எதுவும் கூற முடியாது. உள்துறை மந்திரி, போலீஸ் கமிஷனர் ஆகியோருடன் ஜெயிலில் ஆய்வு நடத்தியபோது சிறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தியதாக” தெரிவித்தார்.

TAGS: