கல்வெட்டியல் ஆராய்ச்சியாளரும் தினமணி முன்னாள் ஆசிரியருமான ஐராவதம் மகாதேவன், தமிழ் அறிஞர் தமிழண்ணல் ஆகியோருக்கு செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தொல்காப்பியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
செக். குடியரசைச் சேர்ந்த அறிஞர் ஜரோஸ்லாவ் வசேக், இங்கிலாந்தைச் சேர்ந்த அறிஞர் ஜான் ரால்ஸ்டன் மார் ஆகியோர் குறள் பீட விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் குடியரசுத் தலைவர் செம்மொழி விருதுகள் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 3) அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனம் ஆண்டுதோறும் செம்மொழித் தமிழ் வளர்ச்சியில் ஈடுபட்ட 7 பேருக்கு விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விரைவில் வழங்க உள்ளார்.
செம்மொழித் தமிழ் வளர்ச்சியில் ஈடுபட்டதற்காக 2009-10, 2010-11 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான விருது பெறுவோர் பட்டியலை புது தில்லியில் குடியரசுத் தலைவர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 3) வெளியிட்டுள்ளது.
2009-10-ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது அறிஞர் ஐராவதம் மகாதேவனுக்கும், குறள் பீட விருது செக் குடியரசைச் சேர்ந்த அறிஞர் ஜரோஸ்லாவ் வசேக் ஆகியோருக்கும் வழங்கப்படுகிறது. இதே போன்று 2010-11-ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது, அறிஞர் தமிழண்ணல்லுக்கும், குறள் பீட விருது இங்கிலாந்தைச் சேர்ந்த அறிஞர் ஜான் ரால்ஸ்டன் மாருக்கும் வழங்கப்படுகிறது.
ரூ.5 லட்சம் பரிசு: தொல்காப்பியர் விருதுகள், குறள் பீட விருதுகள் பெறுவோருக்கு தலா ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு, சான்றிதழ், பொன்னாடை வழங்கப்படும்.
இளம் அறிஞர் விருதுகள்: மதுரையைச் சேர்ந்த டி.சுரேஷ், சிதம்பரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்த எஸ்.கல்பனா, நாமக்கல்லைச் சேர்ந்த ஆர். சந்திரசேகரன், சென்னையைச் சேர்ந்த வாணி அறிவாளன், சிவகாசியைச் சேர்ந்த சி.முத்தமிழ்ச் செல்வன் ஆகியோர் 2009-10-ஆம் ஆண்டுக்கான இளம் அறிஞர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த டி.சங்கையா, ஆத்தூரைச் சேர்ந்த ஏ.ஜெயக்குமார், புதுச்சேரியைச் சேர்ந்த ஏ.மணி, காரைக்குடியைச் சேர்ந்த சி.சிதம்பரம், மதுரையைச் சேர்ந்த கே.சுந்தரபாண்டியன் ஆகியோர் 2010-11-ஆம் ஆண்டுக்கான இளம் அறிஞர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ரூ. 1 லட்சம் பரிசு: இளம் அறிஞர் விருதுகள் பெறுவோருக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கப்படும்.