காவிரியில் கர்நாடகம் அணை கட்டக்கூடாது

Jayalalithaa_pointing_fingerகாவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகம் புதிய அணை கட்டுவதால் தமிழகத்தில் விவசாயம் பாதிக்கும் என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து, முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:

புனல் மின்சார திட்டத்தை அமல்படுத்துவதற்காக மேக்கேதாட்டு என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணைகளை கட்டுவதற்கு தீர்மானித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. மிகவும் முக்கியமான இந்தப் பிரச்னையை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

மேக்கேதாட்டு என்ற இடத்தில் புனல் மின்சார நிலையம் அமைப்பதற்காக காவிரி ஆற்றின் குறுக்கே மூன்று அணைகளை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டிருப்பதாக கர்நாடக மாநில சட்டத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கை பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், ஹேமாவதி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் உள்ள உபரி தண்ணீரை குடிநீர் திட்டங்களுக்காக பயன்படுத்திக் கொள்ள ரூ.500 முதல் ரூ.600 கோடி வரை செலவிட திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேக்கேதாட்டு அருகே கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ள அணைகள் குறித்த புதிய திட்டங்கள் ஏதும் காவிரி நீர் பங்கீட்டு ஆணையத்தின் இறுதி உத்தரவில் கூறப்படவில்லை.

மொத்த தண்ணீரும் நுகர்வதற்குத்தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்று காவிரி நீர் பங்கீட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகவே, கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே அமைக்கத் திட்டமிட்டுள்ள அணைகள் சட்டத்துக்கு புறம்பானது. இது தமிழகத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்து விடும்.

விவசாயம் பாதிக்கும்: கர்நாடக அரசின் புதிய திட்டத்தால் காவிரியில் பாய்ந்து வரும் தண்ணீர் அளவு பாதிக்கப்படுவதோடு, தமிழகத்தின் விவசாயத்தையும் பெருமளவு பாதிக்கும். மேலும், காவிரி நீர் பங்கீட்டு ஆணையத்தின் இறுதி உத்தரவுக்கும் கர்நாடக அரசின் புதிய திட்டம் முரணானது. காவிரி நீர் பங்கீட்டு ஆணையத்தின் இறுதி உத்தரவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது இன்னமும் மத்திய அரசால் செயல்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில், கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே புதிய அணைகளை கட்ட தீர்மானித்திருப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு முற்றிலும் எதிரானது. கூட்டாட்சி முறையின் கீழ் இரு மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆற்றின் குறுக்கே ஆற்றின் தண்ணீருக்கு ஆதாரமாக இருக்கும் மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்டுவது என்பது அனுமதிக்க முடியாதது.

சிவசமுத்திரம், மேக்கேதாட்டு ஆகிய இடங்களில் மின்சார திட்டங்களை கர்நாடக அரசு தானாகவே முன்வந்து செயல்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஏற்கெனவே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

சிவசமுத்திரம், மேக்கேதாட்டு, ஒகேனக்கல், ராசிமணல் ஆகிய திட்டங்களில் புனல் மின்சார திட்டங்களை தேசிய புனல் மின்சார கழகம் அல்லது உரிய தகுதி வாய்ந்த மத்திய மின்சார உற்பத்தி நிறுவனம் மூலம் செயல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடலாம் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்கு முறை குழு ஆகியவற்றை காவிரி நீர் பங்கீட்டு ஆணையத்தின் இறுதித் தீர்ப்பின்படி அமைக்க மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரி தங்களிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். ஆனால், இதுவரை அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில், தமிழக அரசின் முன் அனுமதி ஏதும் பெறாமல் காவிரியின் குறுக்கே புனல் மின்சார திட்டங்களை நிறைவேற்ற கர்நாடக அரசு முன்வந்திருப்பதை தாங்கள் தலையிட்டு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத வரையில், நிரந்தர கண்காணிப்பு நடைமுறைகள் செய்யப்படாத வரை காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு எந்தத் திட்டங்களையும் நிறைவேற்ற மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் அனுமதி எதுவும் வழங்கக் கூடாது என்று உத்தரவிடுமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த விஷயத்தில் தங்களிடம் இருந்து சாதகமான பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன் என்று தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

TAGS: