நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீது தொடர்பான கோப்புகள் மாயமானது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், சிபிஐ முன் தாமாக முன்வந்து ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்களுக்கு நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் நடைபெற்ற முறைகேடு குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நேரடியாகக் கண்காணித்து வருகிறது. இந்த ஒதுக்கீடு தொடர்பான முக்கியமான கோப்புகள் காணாமல் போய்விட்டதாக மத்திய அரசு கூறியது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் அரசுக்கும் முக்கிய எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இந்த முட்டுக்கட்டை நிலையைப் போக்க, பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை பாஜக தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான கோப்புகள் மாயமான விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதன்கிழமை முன்னறிவிப்பின்றி விவாதம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் பேசியது:
சம்பந்தப்பட்ட கோப்புகள் காணாமல் போய்விட்டதாக நான் நம்பவில்லை. அவை திருடுபோயுள்ளன. எனவேதான் இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். எப்போது, எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும் என்பதை அரசு எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
ஒருவேளை அரசு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை என்றால் அரசு நிறைய விஷயங்களை மறைக்கிறது என்றே அர்த்தம் கொள்ள வேண்டியிருக்கும். 2006 முதல் 2009ஆம் ஆண்டுவரை நிலக்கரித்துறையை பிரதமர் மன்மோகன் சிங் தன் வசமே வைத்திருந்தார் என்பதால் அவர் மீது சந்தேக மேகங்கள் சூழ்ந்துள்ளன.
இந்த விவகாரத்தில் தாம் சுத்தமானவர் என்று நிரூபிக்க பிரதமர் விரும்பினால் அவர் தாமாகவே முன்வந்து சிபிஐ முன் ஆஜராகி, வாக்குமூலம் அளிக்க வேண்டும்.
கோப்புகள் மாயமானது மிகவும் தீவிரமான கவலைக்குரிய விஷயமாகும். நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு நடைபெற்றபோது அத்துறையைக் கவனித்த பிரதமர்தான் இதற்குப் பொறுப்பு என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.
கோப்புகள் மாயமானது குறித்து உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற அவரது கோரிக்கைக்கு ஐக்கிய ஜனதா தளம், சமாஜவாதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் பேசுகையில், “”இந்த விஷயத்தில் அரசு ஒரு குரலில் பேசாமல் பல குரல்களில் பேசுகிறது. அவர்கள் (அரசு) எதையோ மறைக்க முயற்சிக்கிறார்கள். கோப்புகளின் காவலாளி நான் அல்ல என்று பிரதமர் கூறுகிறார். அவர்தான் அனைத்துக்கும் காப்பாளர்” என்றார்.
அதிமுகவைச் சேர்ந்த தம்பிதுரை பேசும்போது, “”கோப்புகள் காணாமல் போனதுகுறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசும் நாடாளுமன்றம் தர்மசங்கடத்தில் சிக்கியுள்ளன” என்று தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா பேசும்போது, “”கோப்புகள் அகற்றப்பட்டுள்ளனவே தவிர, அவை காணாமல் போகவும் இல்லை, திருடுபோகவும் இல்லை” என்றார்.
மாநிலங்களவையில்…. மாநிலங்களவையில் இந்த விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி பேசியது:
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான ஆவணப்பூர்வமான ஆதாரங்கள் இல்லாமல் இந்த முறைகேடு தொடர்பான புலனாய்வை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதை அரசிடம் இருந்து அறிய விரும்புகிறேன். இந்த ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
வாய்மொழி விசாரணைக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. எனவே, இந்த வழக்குக்கு ஆதாரமில்லை என்று கூறி முடிக்கப்படும். அப்படி நடந்தால் நாடு ஒட்டுமொத்தமாக ரூ.1.86 லட்சம் கோடி இழப்பைச் சந்திக்க வேண்டிவரும்.
அரசிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று பிரதமர் கூறுகிறார். ஆனால், இப்போது அரசிடம் மறைப்பதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கும் என்று தோன்றுகிறது என்றார் அருண் ஜேட்லி.
பிரதமரிடம் விசாரணை? கருத்து கூற சிபிஐ மறுப்பு
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக பிரதமரிடம் விசாரணை நடத்தப்படுமா? என்று சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவிடம் கேட்டபோது, அவர் நேரடியாக பதிலளிக்க மறுத்து விட்டார். “”பிரதமரிடம் சிபிஐ விசாரணை நடத்துமா என்பதை உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ என்னால் இயலாது. இது தொடர்பாக கருத்து கூற நான் விரும்பவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக எங்கள் அதிகாரிகளுடன் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றம் தொடர்பான விவரங்களை ஊடகங்களுக்குத் தெரிவிக்க முடியாது” என்றார்.
பிரதமரிடம் விசாரிக்க வேண்டும் என்று நிலக்கரிச் சுரங்க முறைகேடு குறித்து விசாரணை நடத்தும் சிபிஐ குழு ஆலோசனை கூறியதாகவும் அதை இயக்குநர் ரஞ்சித் சின்ஹா நிறுத்தி வைத்து விட்டதாகவும் கூறப்படும் நிலையில், அவர் எந்தக் கருத்தும் கூறாமல் மழுப்புவது குறிப்பிடத்தக்கது.
இங்க எங்க நாட்டிலும் அரசுக்குகு ஆகவேண்டியிருப்பின் கோப்புகளும் கணினி பதிவுகளும் மாயமாய் மறைந்துவிடும். எல்லாமே பெரும் அலிபாபா திருட்டுக் கூட்டங்கள்.