கச்சத்தீவு ஒப்பந்தம், காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்பது உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று மக்களவையில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் வியாழக்கிழமை வலியுறுத்தின. அதன் விவரம்:
டி.ஆர். பாலு (திமுக): “இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் ஆணையர் நவி பிள்ளை கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்தார். அப்பகுதியில் சூழ்ந்துள்ள இலங்கை ராணுவத்தினர் முன்னிலையில் தங்கள் நிலையை வெளிப்படையாக பேச முடியாத நிலையில் தமிழர்கள் இருந்தனர். “இலங்கை வடக்கு பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தின் எண்ணிக்கை போர் நடைபெற்ற பகுதியில் மீள்குடியேற்ற நடவடிக்கைக்கு தேவைப்படும் படை பலத்தை விட பல மடங்கு அதிகம்’ என்று நவி பிள்ளை கூறியுள்ளார்.
போரின்போது நடைபெற்ற இனப்படுகொலை குறித்து கேள்வி எழுப்பிய இலங்கை நீதிமன்ற நீதிபதிகளை அந்நாட்டு அரசு நீக்கியுள்ளது.
1995-ஆம் ஆண்டில் நீதித்துறை நடைமுறைகளை மதிக்காமல் சர்வாதிகாரம் செலுத்தியதால் நைஜீரியா, 2007-ஆம் ஆண்டில் நெருக்கடி நிலையை அப்போதைய அதிபர் ஜெனரல் முஷாரஃப் பிரகடனப்படுத்தியதால் பாகிஸ்தான், அதிபர் ராபர்ட் முகாபேவின் செயலால் அதிகரித்த குற்றங்களுக்காக ஜிம்பாப்வே, தேர்தலை வெளிப்படையாக நடத்தாததால் ஃபிஜி ஆகிய நாடுகள் காமன்வெல்த் நாடுகள் அமைப்பில் இருந்து முந்தைய காலங்களில் நீக்கப்பட்டுள்ளன.
எனவே, மனித உரிமை மீறல்களுக்கும் இனப்படுகொலைகளுக்கும் காரணமான இலங்கை அரசை காமன்வெல்த் நாடுகள் அமைப்பில் இருந்து நீக்க இந்தியா குரல் கொடுக்க வேண்டும்.
தம்பிதுரை (அதிமுக): “கச்சத்தீவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரம் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரும் தீர்மானம் கடந்த மே மாதம் நிறைவேற்றப்பட்டது. 1605-ஆம் ஆண்டில் மதுரையில் நாயக்கர்கள் ஆட்சி செலுத்தியபோது ராமநாதபுரம் சமஸ்தான கட்டுப்பாட்டில் கச்சத்தீவு இருந்தது.
1845-ஆம் ஆண்டில் சிலோன் ஆளுநரும் ராமநாதபுரம் ஜமீனுக்கே கச்சத்தீவு சொந்தம் என்று கூறியுள்ளதற்கும் ஆதாரம் உள்ளது.
ஆனால், 1974-ஆம் ஆண்டில் இந்தியா-இலங்கை மேற்கொண்ட ஒப்பந்தத்தில் மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை வழங்கப்பட்டது. 1976-ஆம் ஆண்டில் சர்வதேச எல்லை மறுவரையறையின்போது, கச்சத்தீவில் இந்திய மீனவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் மறுக்கப்பட்டன. அதன் பிறகு அந்தத் தீவை தங்களுக்கு சொந்தமான பகுதி என்று இலங்கை அறிவித்தது.
1960-ஆம் ஆண்டில் நடைபெற்ற பெருபாரி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமல் ஒரு நாட்டுக்கு சொந்தமான பகுதியை வேறு நாட்டுக்கு வழங்க முடியாது’ என்று தீர்ப்பளித்தது. ஆனால், கச்சத்தீவு சட்டவிரோதமாக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
எனவே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கச்சத்தீவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தைத் திரும்பப் பெற வேண்டும்; திருத்தப்பட்ட வேறு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
கோரிக்கைக்கு ஆதரவு: தம்பிதுரை பேசியதும் டி.ஆர். பாலு, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகிய திமுக உறுப்பினர்கள், “இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை. கச்சத்தீவு தொடர்பான பிரமாண பத்திரத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்’ என்று குரல் கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து, தம்பிதுரை, இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர் பி. லிங்கம், மதிமுக உறுப்பினர் கணேசமூர்த்தி ஆகியோரும் கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசு உடனே தலையிட்டு பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்’ என்று வலியுறுத்தினர்.