சிறையில் இருந்து தப்பியோடிய சைக்கோ குற்றவாளி ஜெய்சங்கரை இன்று கர்நாடகா பொலிசார் மடக்கி பிடித்தனர்.
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜெய்சங்கர்(வயது 40) மீது தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் ஏராளமான வழக்குகள் உள்ளன.
குறிப்பாக கொலை, பாலியல் பலாத்காரம் உட்பட பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஜெய்சங்கரை மூன்று மாநில பொலிசாரும் தேடி வந்தனர்.
இதனையடுத்து கடந்த 2011ம் ஆண்டு அவனை கைது செய்த கர்நாடக பொலிசார், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த வாரம் வழக்கு விசாரணைக்காக அவனை தும்கூருக்கு அழைத்துச் சென்று மீண்டும் சிறைக்கு பொலிசார் அழைத்து வந்தனர்.
அப்போது நெஞ்சு வலிப்பதாக பொலிசாரிடம் கூறியதால், சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.
அன்று காலை 6:00 மணிக்கு கைதிகளை எண்ணும் போது, ஜெய்சங்கர் தப்பியோடியது தெரியவந்தது.
உடனடியாகச் சிறையின் சுற்றுப்புறப் பகுதிகளில் பொலிசார் தீவிரமாகத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து இவனை பிடித்துதரும்படி தமிழக பொலிசாரிடம், கர்நாடக பொலிசார் கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில் இன்று பெங்களூரூ பொம்மனஹள்ளியை அடுத்த, குட்லுகேட் பகுதியில் பதுங்கியிருந்த ஜெய்சங்கரை கர்நாடக பொலிசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவனிடம் விசாரணை நடக்கிறது.
ஜெய்சங்கர் தப்பியோடியது தொடர்பாக பரப்பன அக்ரஹாரா சிறைச் சாலையின் ஏ.எஸ்.பி., உட்பட, 11 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.