நாட்டின் எந்த பகுதியிலும் சீன ஊடுருவல் நடைபெறவில்லை. ஒரு அங்குலம்கூட சீனாவுக்கு விட்டுத் தரமாட்டோம். நாட்டின் தேசிய நலன் பாதுகாக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி தெரிவித்தார்.
இது தொடர்பாக மக்களவையில் அந்தோனி வெள்ளிக்கிழமை அளித்த விளக்கம் வருமாறு:
“கடந்த ஆகஸ்ட் 2 முதல் 9-ஆம் தேதிவரை லடாக் பகுதியை தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு தலைவர் ஷியாம் சரண் தலைமையிலான குழு பார்வையிட்டது. லடாக், அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் கட்டமைப்புகள் தொடர்பாக அக்குழு அளித்த அறிக்கை பிரதமர் அலுவலகம் மூலம் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
எல்லை கட்டமைப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து அக்குழு ஆய்வு செய்திருந்தாலும் லடாக் பகுதியின் செயல்பாடு, தேவைகள் குறித்தும், அறிக்கையில் ஷியாம் சரண் குழு குறிப்பிட்டுள்ளது.
லடாக்கையும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளையும் இணைக்க சாலை, கட்டுமானம், பராமரிப்பு, மேம்பாடு, மலைப் பகுதியைத் துளையிடும் பணிகள் குறித்து அறிக்கையில் விவாதிக்கப்பட்டுள்ளது. வான் வழியாக கட்டமைப்புக்குத் தேவையான பொருள்களைக் கொண்டு செல்வது குறித்தும் நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறுதல், லடாக் பகுதியில் வசிக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, இணையதள வசதி, சட்டம் ஒழுங்கு நிலவரம், எல்லை பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையினருக்கு தேவையான அடிப்படை வசதிகள், உள்ளூர்வாசிகளின் குறைகளைக் கேட்டுப் பூர்த்தி செய்தல் போன்ற நடவடிக்கையின் அவசியத்தையும் ஷியாம் சரண் குழு வலியுறுத்தியுள்ளது.
அந்த அறிக்கையின் எந்தவொரு இடத்திலும் இந்தியாவின் எல்லையோர பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதாகவோ ஊடுருவ முயன்றதாகவோ குறிப்பிடவில்லை. இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் சீனாவுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் என்ற உறுதியை இந்த அவைக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
எல்லையில் நடைபெறும் எல்லா நிகழ்வுகளையும் மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. நமது பகுதிகளைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் நாள்களில் தேச நலன்களைக் கருத்தில் கொண்டு அந்த நடவடிக்கைகள் வலுவான முறையில் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளிக்கிறேன்’ என்றார் அந்தோனி.
மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில், எல்லையில் பாகிஸ்தான் படையினரால் இந்திய வீரர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் குறித்து எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் பிரச்னை எழுப்பினர்.
அப்போது “இதுவரை 57 முறை எல்லையில் சண்டை நிறுத்த உடன்பாட்டை பாகிஸ்தான் படையினர் மீறியுள்ளனர். அதில் 80 சதவீதம் கடந்த ஆண்டில் நிகழ்ந்தவை. எல்லையில் இந்திய மண்ணைப் பாதுகாக்க நமது ராணுவம் தயார் நிலையில் உள்ளது. பாகிஸ்தான் படைகள் நடத்தும் அத்துமீறிய தாக்குதல்கள் கடும் கண்டனத்துக்குரியது’ என்று அந்தோனி கூறினார்.
அதைத் தொடர்ந்து எல்லையில் சீன ஊடுருவல் நடைபெற்றதாக வெளியான தகவல் குறித்து உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை மாலையில் பிரச்னை எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அந்தோனி, “மத்தியில் ஆட்சியில் இருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணியோ ஐக்கிய முற்போக்கு கூட்டணியோ, எல்லைப் பிரச்னைகளைப் பொறுத்தவரை சுமுகமாக சீனாவுடன் பிரச்னையை முடித்துக் கொள்ளவே இந்தியா விரும்புகிறது’ என்றார்.
முழு இந்தியாவையும் அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் கூட ஒரு அங்குல கூட விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று தான் சொல்லுவீர்கள்!