ராகுல் தலைமையில் பணியாற்ற விருப்பம்

manmohan_singhராகுல் காந்தி, பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர். வரும் மக்களவைத் தேர்தலுக்குப் பின் அவரது தலைமையின் கீழ் பணியாற்றுவதை விரும்புகிறேன். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதற்காக மகிழ்ச்சியும் அடைவேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

ஜி-20 நாடுகள் கூட்டத்தில் பங்கேற்க ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சென்றுவிட்டு புதுதில்லி திரும்புகையில் சிறப்பு விமானத்தில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:

“”காங்கிரஸ் கட்சியில் பலரும் ராகுல் காந்தியின் தலைமையை விரும்பும்போது தங்களால் மூன்றாவது முறையாகப் பிரதமராவதற்கு முயற்சிக்க முடியுமா?” என்று கேட்கிறீர்கள். வரும் (2014) மக்களவைத் தேர்தலுக்குப் பின் பிரதமர் பதவிக்கு ராகுல் காந்திதான் மிகவும் பொருத்தமாக இருப்பார். அவ்வாறு அவர் தேர்வு செய்யப்பட்டால், அவரது தலைமையின் கீழ் பணிபுரிவதில் நான் மகிழ்ச்சி கொள்வேன்.

மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸýடன் கூட்டணி ஏற்படுமா? என்று கேட்கிறீர்கலள். அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது, நிரந்தர நண்பனும் கிடையாது. பல சமயங்களில் அரசியலில் ஊடல் என்பது ஒரு வாரம் நீடிக்கும். ஆனால், சில நேரங்களில் மிக நீண்ட காலமாகி விடுகிறது. எனவே, திரிணமூல் காங்கிரஸýடன் கூட்டணி வாய்ப்புகளை நான் மறுப்பதில்லை.

மம்தா பானர்ஜி, ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் மிகவும் மதிக்கப்பட்ட உறுப்பினராக இருந்தார். அவரது கட்சி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இடம்பெற்றதையும் காங்கிரஸ் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டது. மீண்டும் அவரது கட்சி காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தால் மகிழ்ச்சிதான்.

நாட்டின் அரசியலுக்கு புத்துயிர் அளிக்க மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்தால் அதை மகிழ்ச்சியுடன் வரவேற்பேன். ஒத்த கருத்துடைய மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்படவே காங்கிரஸ் விரும்புகிறது.

ஷெரீபுடன் சந்திப்பு நடக்குமா? பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை இந்த மாதத்தின் பிற்பகுதியில் சந்தித்துப் பேசும் எண்ணம் இருக்கிறதா என்று முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளீர்கள். சாதாரண சூழ்நிலையில் நவாஸ் ஷெரீபை சந்தித்துப் பேசுவதில் மகிழ்ச்சி அடைவேன். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

ஆனால், உண்மை நிலை என்ன என்று பார்க்க வேண்டும். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலால் இந்தியா வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் பாகிஸ்தான் பிரதமரிடம் பேச்சு நடத்துவது நெருடலைத் தரும்.

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்தாத வரை, மும்பை தாக்குதல் சம்பவத்துக்குக் காரணமானவர்களை பாகிஸ்தான் இந்தியாவசம் ஒப்படைக்காத வரை, ஷெரீபை சந்திப்பது தொடர்பாக இறுதி முடிவு எடுப்பது சாத்தியமற்ற ஒன்றாகும் என்றார் பிரதமர்.

மும்பையில் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீதை நீதியின் முன் நிறுத்த பாகிஸ்தான் அரசு முனையாததையும் அவர் சுதந்திரமாக நடமாடி வருவதையுமே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன் காரணமாக, இந்த மாதம் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க அவர் நியூயார்க் செல்லும்போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபைச் சந்திப்பாரா? என்பது சந்தேகமே.

“நான் ஒரு திறந்த புத்தகம்’

“”என்னைப் பற்றியும், எனது அரசின் செயல்பாடுகள் பற்றியும் பாஜக எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குத் திருப்திகரமாகப் பதிலளித்ததாக நினைக்கிறீர்களா?” என்று கேட்கிறீர்கள்.

“”எழுப்பப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கவே நான் முயற்சிக்கிறேன். நிலக்கரிச் சுரங்க விவகாரமோ, மற்ற விவகாரமோ எதுவானாலும் சரி, நாடாளுமன்றத்திடம் இருந்து எதையும் மறைக்க நான் விரும்புவதில்லை. என்னால் முடிந்தவரை நேர்மையாகவே இருந்து வருகிறேன். நாடாளுமன்றத்தின் முந்தயை கூட்டத்தொடரில் நிலக்கரிச் சுரங்க விவகாரம் தொடர்பாக நான் விரிவாக அறிக்கை வாசித்தேன். ஆனால் அந்த அறிக்கையை முழுமையாக வாசிக்க நான் அனுமதிக்கப்படவில்லை. எனினும், அதை வெளியிட்டேன். நான் ஒரு திறந்த புத்தகம்”.

“”2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் கூறியதுபோல், நிலக்கரிச் சுரங்க விசாரணைக்கு ஆஜராகத் தயார் என்று நீங்கள் ஏன் கூறவில்லை” என்று கேட்கிறீர்கள். “”எனது நடத்தையைக் கண்காணிப்பதிலிருந்து யாரையும் நான் தடுக்கவில்லை” என்று பிரதமர் பதிலளித்தார்.

TAGS: