நாட்டின் இரண்டாவது தேசிய அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மாநிலங்களவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியது:
“நம் நாட்டில் சிறந்து விளங்கும் மொழிகளின் முக்கியத்துவத்தையும் அருமை பெருமைகளை அறியாமலும் சில வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
இந்தியாவின் சிறந்த மொழிகளில் ஒன்றான தமிழின் பெருமையும் செல்வாக்கும் ஏழு கடல்களைத் தாண்டி காலத்துக்கும் அழியாமல் உள்ளது.
தமிழகத்தில் பிறந்த சுப்பிரமணிய பாரதி, தேசிய ஒற்றுமையையும் கலாசார மறுமலர்ச்சிக்கும் வித்திட்டார். ஆனால், இந்தியாவின் கலாசாரம், மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தமிழ் மொழிக்கு உரிய மதிப்பையும் உயரிய நிலையையும் நாம் வழங்கத் தவறிவிட்டோம்.
எனவே, வட இந்திய பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் தமிழ் மொழியின் பெருமையை நாம் போதிக்கும் திட்டத்தைத் தொடங்க வேண்டும். குறிப்பாக, இந்தியா முழுவதும் தமிழைக் கற்க ஆர்வம் காட்டுவோருக்கு சிறப்பு ஊக்கத்தொகையும் தமிழ் கற்றோருக்கு பதவி உயர்வு, ஊதிய பலன்களை வழங்க வேண்டும்.
மத்திய பல்கலைக்கழகங்களில் தமிழ் அறிந்தவரை உயர் பதவியில் நியமிக்க வேண்டும். அதைவிட மேலாக, நாட்டின் இரண்டாவது அலுவல் மொழியாக தமிழை அறிவித்து பெருமைப்படுத்த வேண்டும்’ என்றார் தருண் விஜய்.