இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்து!

india pakistanதனது ஒட்டுமொத்த வணிக கொள்கையின்படி இந்தியாவை எதிர்மறை பட்டியலிருந்து விடுவித்து, தனக்கு “மிகவும் வேண்டப்பட்ட நாடு’ என்ற அந்தஸ்த்தை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சர்வதேச செலாவணி நிதியத்திடம் பாகிஸ்தான் உறுதியளித்துள்ளதாக சனிக்கிழமை தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையானது இந்தியாவுடனான வர்த்தகத்தை அதிகரிக்கும் என்றும், தெற்காசிய நாடுகளிடையேயான தடையற்ற வர்த்தக உடன்படிக்கையின்படி இந்த மண்டலத்திலும் வர்த்தகத்தை அதிகரிக்க வழிவகை செய்யும் என்றும் பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷாக் தர் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் பொருளாதார மேம்பாட்டுக்காக 6.64 பில்லியன் டாலரை வழங்க சமீபத்தில் சர்வதேச செலாவணி நிதியம் ஒப்புதல் அளித்தது. அதற்கான நடைமுறைகளின்போது எழுத்துப்பூர்வமாக இந்த உத்தரவாதத்தை அவர் அளித்ததாக பாகிஸ்தானின் டான் நாளிதழ் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் மக்கள் கட்சி கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இரு நாடுகளிக்கிடையே வர்த்தகத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 5000 பொருள்களில் எதிர்மறை பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 1206 பொருள்களின் மீது கவனத்தை திருப்பியது.

பாகிஸ்தான் மக்கள் கட்சி கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்து வழங்க உறுதியளித்திருந்தது. ஆனால், அது இதுவரை சாத்தியப்படவில்லை.

முன்னதாக, பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமைச்சர் தர், இந்தியாவுக்கு வேண்டப்பட்ட நாடு அந்தஸ்து வழங்குவது உடனடியாக எடுத்துக் கொள்ளப்பட போவதில்லை என்று கூறியிருந்தார்.

எனினும், அண்டைநாடுகளுடன் உறவுகளை மேம்படுத்த பாகிஸ்தான் உறுதி பூண்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், குறிப்பாக பொருளாதாரம், வர்த்தக துறைகளில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருந்தார்.

இரு நாடுளிடையேயான வர்த்தகம் 2012-13-ம் ஆண்டில் 2.35 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இது கடந்த ஆண்டு 1.93 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இஷாக் தர் சர்வதேச செலாவணி நிதியத்திடம் கடந்த ஆக.19-ம் தேதி அளித்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தானின் வர்த்தக கொள்கைகள் குறித்து, குறிப்பாக இரு நாடுகளிடையே வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் தெரிவித்துள்ளார்.

TAGS: