உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த கலவரம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி விஷ்ணு சஹாய் தலைமையில் விசாரணைக் குழுவை அரசு அமைத்துள்ளதாக மாநில உள்துறைச் செயலாளர் கமல் சக்சேனா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மாநிலத்தில் கலவரத்துக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப் பிரதேசத்தின் முசாஃபர்நகர் மாவட்டத்தில் உள்ள கவால் கிராமத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி 3 பேர் கொல்லப்பட்டனர். அதன் எதிரொலியாக மாவட்டத்தில் சனிக்கிழமை இரு வகுப்பினருக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 21 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது.
அங்கு ராணுவம் இரண்டாவது நாளாகத் திங்கள்கிழமையும் கொடி அணிவகுப்பை நடத்தியது.
இந்நிலையில், முசாஃபர்நகரில் நிகழ்ந்த கலவரம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி விஷ்ணு சஹாய் தலைமையில் விசாரணைக் குழுவை உத்தரப்பிரதேச அரசு அமைத்துள்ளதாக மாநில உள்துறைச் செயலாளர் கமல் சக்சேனா, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“”ஆகஸ்ட் 27ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 9ஆம் தேதி வரை நடந்த அனைத்துச் சமபவங்கள் குறித்தும் இந்தக் குழு விசாரிக்கும். இக்குழு தனது அறிக்கையை 2 மாதங்கலில் சமர்ப்பிக்கும்” என்றும் அவர் கூறினார்.
பரவும் வன்முறை :இதனிடையே, மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கும் வன்முறை பரவியுள்ளது. குறிப்பாக முசாஃபர்நகரின் அண்டை மாவட்டமான ஷாம்லியில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிலர் காயமடைந்தனர். அங்கு மசூதி ஒன்றின் இமாமாக இருந்த மௌலானா உமர் தின் (40) சுட்டுக் கொல்லப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் பி.கே.சிங் தெரிவித்தார்.
முசாஃபர்நகர் மாவட்டத்தின் மீராபூர் நகரில் ஒரு நபர் அடித்துக் கொல்லப்பட்டதாக ஆட்சியர் கௌஷல் ராஜ் சர்மா தெரிவித்தார்.
இது தொடர்பாக 6 பேரை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார். சஹரான்பூரில் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கலவரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்து விட்டதாக உத்தரப் பிரதேச உள்துறை முதன்மைச் செயலாளர் ஆர்.எம். ஸ்ரீவாஸ்தவா, லக்னௌவில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்தார்.
முசாஃபர்நகரில் வன்முறையால் காயமடைந்த 45 பேர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக உள்துறைச் செயலாளர் கமல் சக்சேனா கூறினார்.
அஜீத் சிங் கைது: உத்தரப் பிரதேசத்தில் வன்முறையைத் தடுக்க மாநில அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அதேவேளையில், மத மோதல்களைத் தூண்டிவிட தனது எதிரிகள் முயற்சிப்பதாக ஆளும் சமாஜவாதி கட்சி குறை கூறியுள்ளது.
வன்முறையால் பாதிக்கப்பட்ட முசாஃபர்நகர் மாவட்டத்தைப் பார்வையிடுவதற்காக உத்தரப் பிரதேசம் வந்த ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சித் தலைவர் அஜீத் சிங், அவரது கட்சியைச் சேர்ந்த பிரசாத், 2 பாஜக எம்.பி.க்கள் ஆகியோர் காஜியாபாதில் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை இரவில் போலீஸார் எடுத்த அதிரடி நடவடிக்கையில் 200 பேர் கைது செய்யப்பட்டனர். 1,000 பேர் மீது, தடை உத்தரவுகளை மீறியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
உத்தரப்பிரதேச மாநில பேரவை பாஜக தலைவர் ஹுக்கும் சிங், கட்சி எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ் ராணா, பர்தேந்து, சங்கீத் சோம், முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஹரேந்திர மாலிக் ஆகியோர் அவர்களில் அடங்குவர்.
போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்: மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறையால் பல்வேறு தரப்பில் இருந்தும் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சஹாரன்பூர், முசாஃபர்நகர், ஷாம்லி ஆகிய மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகளை மாநில அரசு அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது.
மாநில காவல்துறை ஏ.டி.ஜி. (சட்டம்-ஒழுங்கு) அருண்குமார், முசாஃபர்நகரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “”மாவட்டத்தின் புகானா, ஷாபூர், தௌராகலன் ஆகிய பகுதிகளில் ஆயுத உரிமங்களை ரத்து செய்துள்ளோம். ஏனெனில், அவை கலவரத்தின்போது தவறாகப் பயன்படுத்தப்பட்டன” என்றார்.
ஆளுநர் அறிக்கை: முசாஃபர்நகர் வன்முறை தொடர்பாக மாநில ஆளுநர் பி.எல்.ஜோஷி, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள நிலவரம் ஆகியவை குறித்து தகவல்கள் உள்ளதாகத் தெரிகிறது.
பிரதமர் கவலை: அகிலேஷுடன் பேச்சு
உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ள சம்பவங்களால் கவலையடைந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், மாநில முதல்வர் அகிலேஷ் யாதவுடன் தொடர்புகொண்டு பேசினார். நிலைமையைச் சமாளிக்க மத்திய அரசு அனைத்து உதவிகளும் செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.
முசாஃபர்நகர் நிலைமை குறித்து ஒவ்வொரு 12 மணி நேரத்துக்கும் அறிக்கை அளிக்குமாறு உத்தரப் பிரதேச அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மாவட்டத்தின் கிராமப்புறங்களில் போதுமான அளவுக்கு போலீஸ் மற்றும் ராணுவ வீரர்களைக் குவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் கூறுகையில், “”வன்முறை பாதித்த உத்தரப் பிரதேசத்துக்கு ராணுவம் தவிர, 5000 துணை ராணுவப்படைவீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தேவை ஏற்பட்டால் மேலும் படைகளை அனுப்பவும் நாங்கள் தயார்” என்றார். முசாஃபர்நகரில் இயல்புநிலை திரும்பியதும், அங்கு நிகழ்ந்த மதக் கலவரம் குறித்து பரிசீலிக்கப் போவதாக தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.