திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் காலத்தால் அழியாத சித்திரசபை மூலிகை ஓவியங்கள் 600-ஆண்டுகளுக்குப் பின்னர் புதுப்பொலிவு பெற்றுள்ளன. இதையடுத்து, வருகிற 16-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
குற்றாலம் குற்றாலநாதர் கோயிலின் துணைக் கோயிலான சித்திரசபை, குற்றாலநாதர் கோயிலுக்கு வடபகுதியில் அமைந்துள்ளது. இது சிவனின் “திரிபுர தாண்டவம்’ நடைபெற்ற தலமாகக் கருதப்படுகிறது. மார்கழி திருவாதிரை திருவிழாவின்போது முதலில் சித்திரசபையில் பூஜைகள் நடைபெற்ற பின்னரே, குற்றாலநாதர் கோயிலில் பூஜைகள் நடத்தப்படும். ஐப்பசி திருவிழா, சித்திரை விஷுத் திருவிழாவின்போது, சித்திரசபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுவது சிறப்பாகும்.
தமிழகத்திலுள்ள ஐந்து சபைகளுள், குற்றாலத்தில் உள்ள சித்திரசபை மட்டுமே பஞ்சபூதங்களையும் அடக்கி ஆளும் வகையில் அமைந்துள்ளது. இக்கோயிலில், இறைவன் ஓவிய வடிவில் காட்சியளிக்கிறார்.
கி.பி.16-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இச்சபை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பராக்கிரமபாண்டியனால் தொடங்கப்பட்டு உதயமார்த்தாண்ட வர்மனால் கட்டி முடிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சித்திரசபை பிரமிடுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்கூரை தாமிரத் தகடுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. பிரமிடு அமைப்பின் நிழலும், தாமிரத் தகடுகளின் மணமும் மனதுக்கு அமைதியைத் தருவது கூடுதல் சிறப்பு.
சித்திரசபையில் உள்ள சுமார் 600 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்கள் மூலிகைகளால் வரையப்பட்டவை. 50 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில், கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்றபோதும்கூட மூலிகை ஓவியங்கள் புதுப்பிக்கப்படவில்லை.
இதனால் ஓவியங்கள் சேதமடையத் தொடங்கியதையடுத்து, ஓவியங்களைப் புதுப்பிக்கும் பணி கடந்த 2007-ல் தொடங்கியது. கரூர் செங்குந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பக்தர் வீ.கே.தங்கவேல் மூலிகை ஓவியங்களைப் புதுப்பிப்பதற்கான செலவுத் தொகையாக ரூ.30 லட்சத்து 35 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கினார்.
ஓவியங்களைப் புதுப்பிக்கும் பணி லக்னௌ-இன்டெக் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு, கடந்த 17.9.2010 முதல் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. வைணவக் கோயிலான குற்றாலநாதர் கோவில் சைவ கோயிலாக மாற்றப்பட்டது, இறைவனின் திருமணக் காட்சி, கஜேந்திரமோட்சம் ஆகிய தல வரலாற்றுச் செய்திகள், 63 நாயன்மார்கள், பத்மநாபசுவாமிகளின் அனந்தசயனம், மதுரை மீனாட்சியம்மனின் திருவிளையாடல், ரதி-மன்மதன், ஸ்ரீராமரின் பட்டாபிஷேகம், வாலிவதம் ஆகிய நிகழ்வுகள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி இப்போது முழுவதுமாக முடிவடைந்துள்ளது. இதையடுத்து, செப்.16-ல் சித்திரசபையில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.