தமிழக மீனவர்களை நடுக்கடலில் அடாவடியாகப் பிடித்துச் சென்று சித்திரவதை செய்யும் இலங்கை கடற்படையின் அத்துமீறிய செயல்கள் தினம்தினம் அரங்கேறுகிறது. இலங்கை வசம் உள்ள கச்சத்தீவை இந்தியா திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் குரல்கொடுத்து வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி-யான கே.எஸ்.அழகிரி திடீர் விசிட்டாக இலங்கைக்குப் போய் அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துவிட்டு திரும்பியிருக்கிறார்.
இந்த நேரத்தில் இவர் ஏன் அங்கு சென்றார்? என்று தமிழக அரசியல் கட்சியினர், தமிழ் ஆர்வலர்கள் உட்பட அனைவருமே வினா எழுப்புகின்றனர்.
இலங்கையில் இருந்து திரும்பிய கே.எஸ்.அழகிரி விகடன் இதழுக்கு அளித்த செவ்வி வருமாறு,
நீங்கள் இலங்கை சென்றதன் நோக்கம்?
இலங்கை நாடாளுமன்றத்தில் சௌமியமூர்த்தி தொண்டமானின் நூற்றாண்டு விழா மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இப்போதைய கபினெட் அமைச்சர் ஆறுமுக தொண்டமானின் தாத்தா அவர். இலங்கை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காக முதன்முதலாக ‘சிலோன் தொழிலாளர் காங்கிரஸ்’ என்ற அமைப்பை உருவாக்கியவர்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு, என்னையும் புதுச்சேரியின் முன்னாள் மந்திரி கந்தசாமியையும் அழைத்தார் ஆறுமுக தொண்டமான். அதை ஏற்று நாங்கள் இருவரும் விழாவில் கலந்துகொண்டோம்.
அந்த விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சவைச் சந்தித்தேன். திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணச் சிறைகளில் தமிழக மீனவர்கள் சிரமப்படுகிறார்கள் என்று எடுத்துச் சொன்னேன். அதைக்கேட்ட ராஜபக்ச, ‘ஏன், எங்கள் நாட்டு மீனவர்கள் ஆந்திரச் சிறையில் மூன்று மாதங்களாக இருக்கிறார்களே?’ என்றார்.
மேற்கொண்டு இந்த விவகாரம் பற்றி அவரது சகோதரரும் அமைச்சருமான பசில் ராஜபக்சவிடம் பேசச் சொன்னார். மறுநாள் நானும் கந்தசாமியும் பசிலுடன் முக்கால் மணி நேரம் பேசினோம். எங்களுடன் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமானும் வந்திருந்தார்.
இப்போது புலிகள் இல்லை. ஆயுதம் கடத்துவதோ, பெட்ரோல் கடத்துவதோ கடலில் நடப்பது இல்லை. மீன்பிடிக்க மட்டுமே எங்கள் மீனவர்கள் போகிறார்கள் என்று நான் சொன்ன போது, அமைச்சர் பசில்,
எங்கள் நாட்டில் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமிழர்கள்தான் மீன்பிடி தொழிலைச் செய்கிறார்கள். அவர்களிடம் உள்ளது சாதாரண சிறு ரக படகுகள். ஆனால், உங்கள் மீனவர்கள் மீன்பிடி டிராலியையும், ஆழ்கடலில் பயன்படுத்தும் வலையையும் எடுத்து வருகிறார்கள்.
நான் டெல்லி வந்தபோது, என்னைச் சந்தித்த தமிழக மீனவர்களிடம், ‘இருநாட்டு மீனவர்களும் பேசுங்கள். உங்கள் முடிவு எதுவோ அதை நாங்கள் நிறைவேற்றுகிறோம்’ என்று சொன்னேன்.
ஆனால், நான் எதிர்பார்த்தபடி தமிழக மீனவர்கள் இலங்கைக்கு பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை. நான் விசாரித்தவரை, மாநில அரசு அவர்களுக்கு அனுமதி தரவில்லை எனறு கேள்விப்பட்டேன்’ என்றார்.
அப்போது அவரிடம் நான் ஒரு யோசனை சொன்னேன். பிரச்சினைக்குரிய கடல் பகுதியில் 15 நாட்கள் தமிழக மீனவர்களும், 15 நாட்கள் இலங்கை மீனவர்களும் மீன்பிடிக்க ஏற்பாடு செய்யலாம் என்றேன்.
அவரும், ‘இது நல்ல கருத்துதான்’ என்றார். பிறகு, திருகோணமலை சிறையில் இருந்த தமிழ் மீனவர்களை நான் சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டு வந்தேன்.
உங்கள் விசிட்டில் பேசிய விஷயங்கள் குறித்து, டெல்லி காங்கிரஸ் மேலிடத்திடம் பேசினீர்களா?
கட்சியின் துணைத் தலைவர் ராகுல் கடந்த 3-ம் தேதியன்று என்னை அழைத்து இது விஷயமாக 45 நிமிடங்கள் பேசினார். தலைவி சோனியாவிடமும் விளக்கினேன். வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் பேசினேன்.
இருநாட்டு மீனவர்களும் சந்தித்து விவாதிப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு முறைப்படி கடிதம் எழுதினார்களாம். ஆனால், இங்கிருந்து ரெஸ்பான்ஸே இல்லையாம். பிரச்சினை என்றால், ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். ஆனால், தீர்வு எட்டுவதை இவர்கள் அறவே விரும்பவில்லை போலும்!
அதிபர் ராஜபக்சவை நீங்கள் சந்தித்தது தமிழகத்தில் ஒருசிலர் மத்தியில் எரிச்சலை உண்டாக்கியிருக்கிறதே?
45 வருடங்களாக காங்கிரஸில் இருக்கும் எனக்கு எதைச் செய்ய வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். தமிழக மீனவர்களை இலங்கைச் சிறையில் இருந்து மீட்டு வருவது காங்கிரஸுக்குப் பெருமை. அந்தப் பெருமையான காரியத்தை நான் செய்திருக்கிறேன்.
இதற்குமுன், நான்கு முறை சென்று இலங்கைச் சிறையில் இருந்த தமிழக மீனவர்களை திரும்ப அழைத்துவர ஏற்பாடு செய்திருக்கிறேன். இது மீனவர்களுக்கும் நன்றாக தெரியும்.
இலங்கைச் சிறையில் தவிப் பவர்களுக்கு உதவ வேண்டுமே’ என்று துளிகூட இங்கு யாரும் நினைப்பது இல்லை. இங்குள்ள தமிழ் ஆர்வலர்களுக்கும் இலங்கையில் உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு.
இவர்கள் அவர்களிடம் சொல்லி, அட்லீஸ்ட்… சிறைச்சாலையில் போய் பார்க்கச் சொல்லலாம். வக்கீலை ஏற்பாடு செய்து கொடுக்கலாம். அதையெல்லாம் யாரும் செய்வதில்லை.
நல்ல விஷயத்தை நான் செய்தேன். அதற்காக என்னை விமர்சனம் செய்தால் கவலைப்படப் போவதில்லை என்றார்.
இவரது கருத்துகள் இன்னும் என்னென்ன பிரச்னைகளைத் தூண்டப்போகிறதோ?