இலங்கைக்கு போர்க் கப்பல்களை வழங்கக் கூடாது!

Jayalalithaa_pointing_fingerஇலங்கைக்கு போர்க் கப்பல்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்திலுள்ள அப்பாவி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கைக்கு போர்க் கப்பல்களை வழங்கும் நடவடிக்கை தமக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை எழுதிய கடிதத்தின் விவரம்:

இலங்கையில் இறுதிப் போர் நடைபெற்ற போது அந்த நாடு இன அழிப்பு நடவடிக்கைகள் மற்றும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டது. மேலும், போர் முடிந்த பிறகு அங்குள்ள சிறுபான்மையின மக்களான தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். இலங்கை அரசின் இந்தச் செயல்பாடுகள் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும், அரசியல் அமைப்புகளுக்கும் உணர்வுப்பூர்வமான பாதிப்பை ஏற்படுத்தின. இந்தச் சூழ்நிலையில் அது தொடர்பாக அதாவது இலங்கையில் இப்போதுள்ள அரசுடன் இந்தியாவுக்குள்ள உறவுகள் குறித்து பலமுறை தங்களுக்கு எழுதிய கடிதங்களில் குறிப்பிட்டிருக்கிறேன்.

சட்டப் பேரவை தீர்மானம்: இலங்கைப் பிரச்னை தொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில், இலங்கையை நட்பு நாடு என்று சொல்வதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இலங்கையைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள ராணுவ பயிற்சி மையங்களில் பயிற்சி அளிக்கப்படும் போது அதற்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. இலங்கைத் தமிழர் பிரச்னையில் சர்வதேச நெருக்குதல்களுக்கு அந்த நாட்டு அரசு பணிவதில்லை என்பதோடு, அங்குள்ள தமிழர்களுக்கு குறைந்தபட்ச அரசியல் உரிமைகள் வழங்க வகை செய்யும் 13-ஆவது சட்டத் திருத்தத்தையும் நீர்த்துப் போகச் செய்கிறது.

அதிர்ச்சி அளிக்கிறது: இலங்கைத் தமிழர்கள் பிரச்னை ஒருபுறம் இருக்க, பாக்ஜலசந்தி பகுதியில் மீன்பிடிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஏழை மீனவர்கள் மீது இலங்கை கடும் நடவடிக்கைகளை எடுக்கிறது. இதுவரை 97 மீனவர்களை சிறைபிடித்து வைத்துள்ளனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதுடன், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், இலங்கைக்கு 2 போர்க் கப்பல்களை இந்தியா வழங்க இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. பாக்ஜலசந்தி பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தும் இலங்கை ராணுவத்தினருக்கு எந்தவிதமான ராணுவ தளவாடங்கள் சார்ந்த உதவியையும் இந்திய அரசு அளிக்காது என்று தீர்க்கமாக நம்பினோம்.

இந்த நிலையில், இலங்கைக்கு 2 போர்க் கப்பல்களை வழங்கும் பணிகள் நடவடிக்கையில் உள்ளதாக பிரதமர் அலுவலக இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்ததாக ஊடகங்களில் புதன்கிழமை செய்திகள் வெளியாகியுள்ளன. இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

இந்த விஷயத்தில் தமிழக மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் உணர்வுகளை பிரதமரிடம் தெரிவித்திருப்பதாக இணையமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். தமிழகத்துக்கு எதிரான இதுபோன்ற விஷயத்தில் நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்பே இந்திய அரசு சிந்தித்து இருக்காதா என்பது எனக்கு வியப்பினைத் தருகிறது. போர்க் கப்பல்களை வழங்குவது தொடர்பாக இலங்கை அரசுடன் பழைய ஒப்பந்தங்கள் ஏதும் இருந்தால் அதை இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ரத்து செய்திட வேண்டும்.

இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலைக்கு அந்த நாட்டு அரசை பொறுப்பேற்கச் செய்வதில் இருந்து விலக்கி வைப்பதுடன், அந்த நாட்டுக்கு போர்க் கப்பல்களை வழங்கும் இந்தியாவின் நடவடிக்கைகள் இலங்கை அரசை அங்குள்ள தமிழர்களுக்கு எதிராக மேலும் கடுமையாக நடந்து கொள்ளச் செய்வதுடன் தமிழக மீனவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கச் செய்து விடும். போர்க் கப்பல்களை வழங்கும் முடிவு தமிழக மக்களை அவமதிக்கும் செயலாகும்.

எனவே, இலங்கைக்கு போர்க் கப்பல்களை வழங்கும் விஷயத்தை உடனடியாக விளக்கிட வேண்டும். போர்க் கப்பல்களை அளிப்பது தொடர்பாக ஏதேனும் பழைய ஒப்பந்தங்கள் இருந்தால் அதை ரத்து செய்ய வேண்டும். இலங்கை ராணுவப் படைகளுக்கு எந்த உதவிகளும் செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

TAGS: