முசாஃபர் நகரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட சென்ற அந்தமாநில முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு எதிராக கவால் பகுதி மக்கள் கருப்பு கொடி காட்டி எதிரப்பு தெரிவித்தனர்.
முசாஃபர் நகரில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. அதில், 47 பேர் உயிரிழந்தனர்.
கலவரம் பாதித்த பகுதிகளை பிரதமர் மன்மோகன் சிங் திங்கள்கிழமை பார்வையிடுகிறார். அப்போது, அகிலேஷ் யாதவுடன் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட கவால் கிராமத்தில் அகிலேஷ் யாதவ் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு நடத்தினார்.
கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி அந்தப் பகுதியில் தான் ஈவ்டீசிங் பிரச்னையால் முதலில் கலவரம் ஏற்பட்டு மூன்று பேர் உயிரிழந்தனர்.
அப்போது, “கலவரத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசு தவறிவிட்டது’ என்று அப்பகுதி கிராம மக்கள் கருப்பு கொடி காட்டி கோஷமிட்டனர். எதிர்க்கட்சிகளும், சிறுபான்மைத் தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.
பின்னர் மாலிக்பூர், கன்டலா பகுதிகளுக்குச் சென்ற அகிலேஷ் யாதவ் கலவரத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அகிலேஷ் யாதவ் கூறியது, “இது ஒரு துரதிஷ்டவசமான சம்பவம். கலவரம் நடைபெற்றயுடன் சிலர் மேலும் கிளர்ச்சியைத் தூண்டும் வகையில் போலி வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளத்தில் போட்டுள்ளனர்.
இதனால் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றது. இதற்கு சில அரசியல் கட்சிகளும் காரணம்.
குற்றவாளிகள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும். இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்லேஷ் யாதவ் கூறினார்.
போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்: கலவரத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கத் தவறிய முசாஃபர் நகரின் சிறப்பு கண்காணிப்பாளர் சுபாஷ் சந்தர துபேவை ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்து மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. துபே மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
போட்டியிட மறுப்பு: இதனிடையே 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கலவரம் பாதித்த பகுதியான பாக்பட் மக்களவை தொகுதியில் இருந்து சமாஜ வாதி கட்சியின் சார்பில் சோம்பால் சாஸ்திரி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கலவரத்தை மாநில அரசு கட்டுப்படுத்த தவறியதாக குற்றம்சாட்டி அவர் போட்டியிட மறுத்துள்ளார்.