இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு தமிழில் எந்த புதிய படங்களிலும் கமிட்டாகாமல் தெலுங்குக்கு சென்று விட்டார் அனுஷ்கா. ராணி ருத்ரம்மா தேவி, பாகுபலி என்ற இரண்டு வரலாற்றுப்படங்களிலும் முழுவீச்சில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படங்களுக்காக மாதக்கணக்கில் வாள் சண்டை, கம்பு சுற்றுதல் என்று சில கலைகளை பயின்று நடித்து வரும் அனுஷ்காவுக்கு அடிக்கடி படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டு, கை, கால்களில் ரத்தம் வழிகிற அளவுக்கு நடித்துக்கொண்டிருக்கிறாராம்.
இதனால் முதலில் அனுஷ்கா இடம் பெறும் சண்டை காட்சிகளை அதிரடியாக படமாக்கி வந்த இயக்குனர், பின்னர் சண்டை காட்சியின் வேகத்தை குறைத்தாராம். ஆனால், அதற்கு அனுஷ்கா சம்மதிக்கவில்லையாம். கதைக்கு என்ன தேவையோ அதன்படி எடுத்தால்தான் கேரக்டர் நிற்கும். இல்லையேல் டம்மியாகி விடும் என்று வலியுறுத்தினாராம்.
அதனால், அவர் விருப்பப்படியே ஆக்ஷன் காட்சிகளை அனல் பறக்கிற அளவுக்கு படமாக்கிக்கொண்டிருக்கிறார்களாம். ஒரு காலத்தில் ஆந்திராவை ஆண்ட ராணி ருத்ரம்மா தேவியாகவோ தத்ரூபமாக மாறி ஆவேச நடிப்பை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் அனுஷ்கா, சமீபத்தில் ஆந்திர மீடியாக்களை சந்தித்தபோது, சினிமாவில் அருந்ததிதான் எனது திறமைக்கு சவாலாக அமைந்த படம் என்று நினைத்தேன். ஆனால் இப்போது நடித்து வரும் இரண்டு சரித்திர படங்கள்தான் எனக்கேற்ற படங்கள் என்பதை உணர்கிறேன். அந்த அளவுக்கு எனது திறமைக்கு நல்ல தீனி கிடைத்திருக்கிறது. அதனால் சினிமா உள்ள காலம் வரை என் நடிப்பு பேசப்படும் அளவுக்கு முழு ஈடுபாடு காட்டி நடித்துக்கொண்டிருக்கிறேன் என்றாராம்.