புத்தூரில் பிடிபட்ட தீவிரவாதிகள், பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை மனித வெடிகுண்டு தொழில்நுட்பம் மூலம் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியிருந்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இந்த சதித் திட்டத்துக்கு பயன்படுத்துவதற்காக லேப்டாப் பேக் வடிமைப்பில் வெடிகுண்டு வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.
ஆந்திர மாநிலம், புத்தூரில் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தியபோது பிலால் மாலிக்கின் உறவினர் ஜபார் என்பவர் அருகில் உள்ள மற்றொரு தெருவில் வசிப்பது தெரியவந்தது. அவரைப் பிடிக்க போலீஸார் சென்றபோது அவர் ஏற்கெனவே தப்பியோடிவிட்டார். இதையடுத்து அந்த வீட்டின் உரிமையாளர் உதவியுடன் தமிழக சிபிசிஐடி டிஜிபி நரேந்திரபால் சிங், பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி. கண்ணப்பன் சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி. அன்பு, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. ரூபேஸ் குமார் மீனா ஆகியோர் அடங்கிய போலீஸ் குழு பிலால் மாலிக் முன்னிலையில் அந்த வீட்டை சோதனையிட்டது.
அப்போது அந்த வீட்டிலிருந்து நவீன ரக துப்பாக்கி ஒன்றும் லேப்டாப் பேக் வடிவில் இருந்த ஒரு நவீன ரக வெடிகுண்டையும் கைப்பற்றியது. இது குறித்து பிலால் மாலிக்கிடம் போலீஸார் துருவித்துருவி விசாரணை நடத்தினர். அப்போது அவர், பேக் வடிவிலான வெடிகுண்டு மனித வெடிகுண்டாக பயன்படுத்தக் கூடியது என்றும் மேலும் ரிமோட் அல்லது செல்போன் மூலம் சில கி.மீ. தொலைவில் இருந்து இயக்கக் கூடியது என்றும் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள், இந்த குண்டை எங்கு வைக்க திட்டமிட்டிருந்தனர் என்ற கோணத்தில் விசாரித்தனர். அப்போது, மாலிக், பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் மாநில முதல்வருமான நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டு அதைத் தயாரித்ததாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட போலீஸ் பக்ருதீனிடம் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸ் விசாரணை நடத்தியபோது, கடந்த மாதம் திருச்சியில் நடந்த இளந்தாமரை மாநாட்டுக்கு நரேந்திர மோடி வருவது உறுதி செய்யப்பட்டதும் அவரை கொலை செய்ய திட்டமிட்டோம். ஆனால், தமிழகத்தில் பல இடங்களில் நோட்டமிட்டபோது காவல்துறை எங்களை எளிதாக கண்காணித்து கண்டுபிடிக்க வாய்ப்பு இருப்பது தெரியவந்தது. மேலும் எங்கள் சமூகத்தை சேர்ந்த சில தலைவர்களே எங்கள் நடமாட்டத்தை காட்டிக்கொடுக்கும் சூழல் இருந்தது. இதனால் நரேந்திர மோடி திருச்சி வருவதற்கு முன்பே குஜராத்தில் அவரை கொலை செய்துவிட வேண்டும் என்று தற்போது தலைமறைவாக இருக்கும் அபுபக்கர் சித்திக்கும் நானும் (பக்ருதீன்) குஜராத்துக்கு சென்றோம். அபுபக்கர் சித்திக்தான் அந்த வெடிகுண்டை வடிவமைத்தார் என்று பக்ருதீன் தெரிவித்துள்ளார்.
மேலும் விசாரணையில் நரேந்திரமோடியின் நடமாட்டத்தை பல நாள்கள் வேவு பார்த்தும் அவரது பாதுகாப்பு அமைப்பை மீறி எங்களால் அவரை நெருங்கக் கூட முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த வெடிகுண்டின் தொழில்நுட்பம் குறித்து வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.