இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல, 100 புத்தக வெடிகுண்டுகளை, பயங்கரவாதி அபுபக்கர் சித்திக், தயாரித்து, மறைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவல், அவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூரில் இந்து முன்னணி மாநில செயலர் வெள்ளையப்பன், சேலத்தில், பா.ஜ., மாநில செயலர் ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்டவர்களின் கொலை வழக்குகளில், “போலீஸ்’ பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் மற்றும் அபுபக்கர் சித்திக்கை, தமிழக போலீசார் தேடி வந்தனர். அபுபக்கர் சித்திக் தவிர மற்ற மூவரும், கடந்த வாரம், போலீசிடம் சிக்கி உள்ளனர்.
விசாரணையில் “திடுக்’: இதில், கடந்த சனிக்கிழமை சிக்கிய பிலால் மாலிக்கிடம் விசாரித்ததில், அவன் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:எங்கள் கும்பலில் இருந்த, நாகூரைச் சேர்ந்த, அபுபக்கர் சித்திக், பெங்களூரு குண்டு வெடிப்புக்குப் பின், சண்டை போட்டு, தனியாக பிரிந்து சென்று விட்டார்.
அவர் புத்தக குண்டுகள் தயாரிப்பதில் கில்லாடி. அவர், 100 புத்தக குண்டுகளை தயார் செய்து மறைத்து வைத்துள்ளார். அதை, இந்து அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு கூரியரில் அனுப்பி, கொலை செய்ய திட்டமிட்டிருந்தார்.
கடந்த, 2005ல், நாகூரில் இந்து முன்னணி நிர்வாகி, தங்கமுத்துகிருஷ்ணனை கொலை செய்ய, புத்தக பார்சலில் குண்டு வைத்து அனுப்பினார்.அதை வாங்கி பிரித்துப் பார்த்த போது, குண்டு வெடித்து, அவரின் மனைவி மலர்க்கொடி பரிதாபமாக இறந்தார்.
மயிலாடுதுறையில், ஜெகவீர பாண்டியனுக்கு, புத்தக குண்டு அனுப்பிய போது, போலீசாருக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்ததால், தபால் நிலையத்திலேயே, அதை செயலிழக்கச் செய்தனர்.
தற்போது, சித்திக்கிடம், 100 புத்தக குண்டுகள் உள்ளன. அதை யாருக்கெல்லாம் அவர் அனுப்புவார் என்பது தெரியாது. இதற்கான, பட்டியல் அவரிடம் உள்ளது. எங்களை விட்டு பிரிந்து சென்றதால், நாங்கள் இதைப் பற்றி எல்லாம் விசாரிப்பதில்லை. நாங்கள் புத்தூரில் தங்கி இருக்கும் தகவல், அவருக்கு தெரியும்.
அவர் எங்களிடம் வந்த போது, நாங்கள் விரட்டி விட்டோம். இமாம் அலி தான் எங்கள் குரு. 2002ல், இமாம் அலி, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் சமாதியில் நாங்கள், நான்கு பேரும், இந்து இயக்கப் பிரமுகர்களை கொலை செய்வதாக, சபதம் எடுத்துக் கொண்டோம்.
எங்களுக்கு பாகிஸ்தான், வங்கதேசம் உட்பட, 12 நாடுகளில் இருந்து பணம் வந்தது. புத்தூரில் பதுங்கி இருந்த போது, எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே, எங்கள் நடமாட்டத்தை காட்டிக் கொடுத்து விட்டனர்.இவ்வாறு, பிலால் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
பாதுகாப்பு அதிகரிப்பு: “போலீஸ்’ பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் சிக்கிய நிலையில், கூட்டாளியான அபுபக்கர் சித்திக்கை தேடும் பணியில் தனிப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழக – ஆந்திர மாநில எல்லையான வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு மலைப் பகுதிகளில் அவர் பதுங்கி இருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி., போலீசாரும், ஆந்திர மாநில தீவிரவாத ஒழிப்பு சிறப்பு படையினரும் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும், திருப்பூரிலும், சித்திக்கை தேடி, போலீசார் கணகாணித்து வருகின்றனர்.
மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள இந்து அமைப்பு நிர்வாகிகளின் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.கடந்த, 18 ஆண்டுகளாக பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு, தலைமறைவாக உள்ள அபுபக்கர் சித்திக்கை பிடிப்பது, போலீசுக்கு பெரும் சவாலாக உள்ளது.
திருப்பூரில் அவர் சில காலம் தங்கியிருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர் இங்கு பதுங்கியிருக்கலாம் என்ற கோணத்தில், போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
திருப்பூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இந்து அமைப்பு நிர்வாகிகள் மீது, தாக்குதல் நடத்த, பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக கிடைத்துள்ள தகவலால், நிர்வாகிகள் சிலருக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.
பண பங்கீட்டில் பிரிந்த சித்திக்! பெங்களூரு, பா.ஜ., அலுவலக குண்டு வெடிப்புக்கு, “போலீஸ்’ பக்ருதீன், 20 லட்ச ரூபாய் பெற்ற நிலையில், அதை பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்னையில், சித்திக் பிரிந்து சென்றதுதெரியவந்துள்ளது.
பெங்களூரு, மல்லேஸ்வரம், பா.ஜ., அலுவலகம் அருகே நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, மேலப்பாளையத்தைச் சேர்ந்த கிச்சான் புகாரி, உட்பட ஐவரை, பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில், பயங்கரவாதி, “போலீஸ்’ பக்ருதீனுக்கு தொடர்பிருக்கலாம் என, பெங்களூரு போலீசார் நம்பியதால், இணை கமிஷனர் ஹேமந்த் தலைமையில், சி.பி.சி.ஐ.டி., காவலில், தனி இடத்தில் உள்ள, “போலீஸ்’ பக்ருதீனிடம், ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
விசாரணை குறித்து, பெங்களூரு போலீசார் கூறியதாவது:பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக, கைதான, 32 பேரிடம் நடத்திய விசாரணையில், பக்ருதீன், பிலால், பன்னா மற்றும் சித்திக்கிற்கு தொடர்பு உள்ளது தெரிந்தது.
வெடிகுண்டு தயாரிக்க, பிலால் மாலிக், வேலூர், குடியாத்தத்தில், பட்டாசு தயாரிக்கும் இடத்தில், வெடிமருந்து வாங்கியுள்ளார். அங்கிருந்து ரயில் மூலம், வெடிமருந்துகள் பெங்களூரு கொண்டு வரப்பட்டு, மல்லேஸ்வரத்தில், ஒரு வீட்டில் வைத்து, வெடிகுண்டை பக்ருதீன் தயாரித்து உள்ளார்.
இதற்காக இவர்கள், மல்லேஸ்வரத்தில், இரண்டு மாதம் தங்கினர். வெடிகுண்டு வைக்க, 20 லட்ச ரூபாய், பக்ருதீன் பெற்றுள்ளார். அதில், 10 லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு, மீதியை மற்றவர்களுக்கு கொடுத்ததால், பிரச்னை ஏற்பட்டது.
அப்போது, தான் தலைவன் என்பதால், அதிகம் எடுத்துக் கொண்டதாக பக்ருதீன் கூறினார். இதனால், பக்ருதீனும், சித்திக்கும் அடித்துக் கொண்டனர். பின், 3 லட்ச ரூபாயை வாங்கிக் கொண்டு, சித்திக் பிரிந்து சென்றுள்ளார். பக்ருதீனை, நாங்களும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து உள்ளோம்.இவ்வாறு பெங்களூரு போலீசார் தெரிவித்தனர்.
பிரியாணி கேட்டு பிலால் அடம்! வேலூர் சிறையில், பயங்கரவாதி பிலால் மாலிக், பிரியாணி கேட்டு, ரகளை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, சிறை காவலர்கள் கூறியதாவது: ராஜிவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் அடைக்கப்பட்டுள்ள அறைக்கு, பக்கத்தில் உள்ள அறையில், அடைக்கப்பட்டுள்ள மாலிக், குடிக்க மினரல் வாட்டர் கேட்டார்.
சில நம்பர்களை கொடுத்து, போன் போட்டு கொடுக்கச் சொல்கிறார். மறுத்த போது, “வேலூர் சிறையில் பணம் கொடுத்தால் எல்லாம் கிடைக்கும் என்கின்றனர்; இங்கு நான் கேட்பதை கொடுக்க வேண்டும்’ என, மிரட்டல் விடுத்தார்.
நேற்று மதியம், சாப்பாடு கொடுத்த போது, சிக்கன் பிரியாணி, மட்டன் கேட்டுள்ளார். “மாதம் இரண்டு முறை தான் கொடுப்போம்’ என, சிறை அதிகாரிகள் கூறிய போது, “எனக்கு தினமும்வேண்டும்; கொடுத்தே ஆக வேண்டும்’ என, ஆவேசத்துடன் ரகளை செய்த மாலிக்கை, சிறை அதிகாரிகள் சமாதானம் செய்தனர். இவ்வாறு சிறை காவலர்கள் கூறினர்.
கொலை பட்டியல்: தமிழகத்தில், இந்து அமைப்புகளின் தலைவர்கள், 32 பேரை தீர்த்துக் கட்ட, “போலீஸ்’ பக்ருதீன் திட்டமிட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னையில் கைது செய்யப்பட்ட, “போலீஸ்’பக்ருதீனை வேலூரில் தனி இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
விசாரணையில், பக்ருதீன் கூறியதாக, போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தமிழகத்தில், இந்து இயக்கங்களை கட்டுப்படுத்த, பாகிஸ்தானில் பயிற்சி கொடுத்து அனுப்பினர். மதுரை வந்த அத்வானியை கொல்ல, திருமங்கலம் பாலத்திற்கு அடியில் குண்டு வைத்தோம்.
தமிழகத்தில், வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ், அரவிந்த் ரெட்டி உட்பட, இந்து இயக்கங்களைச் சேர்ந்த, 32 பேர் பட்டியல் எங்களிடம் கொடுக்கப்பட்டது. அதில், வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் உட்பட, ஆறு பேரை கொலை செய்தோம்.
சிறப்பு புலனாய்வு குழுவினர் தேடியதுடன், போஸ்டர் ஒட்டியதால், ஆந்திராவிற்கு சென்றோம். தெலுங்கானா போராட்டம் நடந்ததால், போஸ்டர்களை ஆந்திர போலீசார் கண்டுகொள்ளவில்லை.
இதுவும் எங்களுக்கு சாதகமாகியது. நரேந்திர மோடி, சென்னைக்கு வரும் போது, அவரை தீர்த்துக் கட்ட திட்டம் போட்டிருந்தோம். ஆனால், அதற்குள் போலீஸ் பிடியில் சிக்கிக் கொண்டோம்.
நாங்கள் சிக்கிக் கொண்டாலும், எங்களிடம் பயிற்சி பெற்று, பல்வேறு இடங்களில் பதுங்கி இருக்கும், 100 தீவிரவாதிகள், திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்றும் வகையில், திட்டம் தயாரித்துக் கொடுத்துள்ளோம். இவ்வாறு பக்ருதீன் கூறியுள்ளான்.