வைட்டமின் சத்து மாத்திரைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால் அவ்வகையான மாத்திரைகளை நோயாளிகளுக்குப் பரிந்துரைப்பதை மருத்துவர்கள் குறைத்துள்ளனர்.
குறிப்பாக வைட்டமின் சி சத்து மாத்திரைகளுக்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வைட்டமின் சி மாத்திரை ஒன்று ரூ. 1.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதன் விலை 50 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. லாபம் குறைந்ததால் வைட்டமின் சி சத்து மாத்திரைகளை தயாரிக்க மருந்து தயாரிப்பாளர்கள் முன் வருவதில்லை.
விலை குறைப்பு: 348 அத்தியாவசிய மூலப்பொருள்களின் விலையைக் குறைத்து மத்திய அரசு கடந்த மே மாதம் 15-ஆம் தேதி ஓர் உத்தரவை பிறப்பித்தது. ஆனால் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில் குறைக்கப்பட்ட மருந்துகளின் விலையில் பல்வேறு குளறுபடிகள் எழுந்தன. உதாரணமாக, ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் மருந்தின் விலை ரூ. 200 என்றால் அதனை ரூ. 100 ஆக மத்திய அரசு குறைத்தது. ஆனால் அதே மருந்து வேறு நிறுவனத்தால் ஏற்கெனவே ரூ.75-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
மருந்துகளின் விலையை மத்திய அரசு குறைத்ததும் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு வழங்கும் லாப சதவீதத்தை மருந்து தயாரிப்பாளர்கள் குறைத்தனர். கடந்த 45 ஆண்டுகளாக மாற்றம் செய்யாமல் வழங்கப்பட்டு வந்த லாப சதவீதம் திடீரென குறைக்கப்பட்டது. அதிக லாபம் கிடைக்காததால் மருந்து தயாரிப்பாளர்கள் மருந்துகளின் உற்பத்தியைக் குறைத்துள்ளனர். சில நிறுவனங்கள் குறிப்பிட்ட மருந்துகளின் தயாரிப்பை முழுவதுமாக நிறுத்திவிட்டன என்றும் கூறப்படுகிறது.
தட்டுப்பாடு: தயாரிப்பு, கொள்முதல் என இரண்டுமே குறைந்துள்ளதால் மருந்துகளின் புழக்கமும் கணிசமாகக் குறைந்துவிட்டது. குறிப்பாக ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ஒவ்வாமை, வெறிநாய் கடி, முடக்குவாதம், வாந்தி ஆகிய நோய்களுக்கான மருந்துகளும், வைட்டமின் சி மாத்திரை, வைட்டமின் பி1, பி6, பி12 ஊசி மருந்துகளின் வரத்தும் குறைந்துள்ளதாக சில்லறை மருந்து விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை மாவட்ட மருந்து வணிகர் சங்க பொதுச் செயலாளர் டி.நடராஜன் கூறியது:
குழந்தைகளுக்கு வழங்கப்படும் வைட்டமின் சி மாத்திரைகளின் வரத்து முழுவதுமாகக் குறைந்துவிட்டது. வைட்டமின் சி மாத்திரைகளைத் தயாரித்து விற்பனை செய்த சுமார் ஆறு நிறுவனங்களும் இதன் தயாரிப்பை நிறுத்திவிட்டதாகத் தெரிகிறது. பெரியவர்களுக்கு வழங்கப்படும் வைட்டமின் சி மாத்திரைகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. மென்று சாப்பிடும் வைட்டமின் சி மாத்திரைகள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. ஆனால் அவற்றை சர்க்கரை நோயாளிகள் உட்கொள்ள முடியாது என்றார் அவர்.
இது குறித்து சில்லறை விற்பனையாளர் ஒருவர் கூறியது:
விலைகள் குறைக்கப்பட்டுள்ளதால் மருந்துகளின் கொள்முதல் அளவு குறைந்துள்ளது. இதனால் செயற்கையான தட்டுப்பாடு நிலவுகிறது. மருந்துகளின் கொள்முதல் அளவு குறைந்துள்ளதால் பெரிய நிறுவனங்களின் மருந்துக் கடைகளில் மட்டுமே மருந்துகள் இருப்பு உள்ளன. தமிழகத்தில் சுமார் 25 ஆயிரம் மருந்துக் கடைகள் உள்ளன. இவற்றில் மருந்துகள் இருப்பு இல்லாமல் சில்லறை வர்த்தகர்கள்தான் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
இது குறித்து சென்னையைச் சேர்ந்த டாக்டர் மகேஷ் கூறியது:
வைட்டமின் சி மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே அத்தியாவசியத் தேவையில் உள்ள நோயாளிகளைத் தவிர மற்றவர்களுக்கு அந்த மாத்திரைகளைப் பரிந்துரைப்பதைக் குறைத்துள்ளோம். அதற்கு பதிலாக வேறு மூலப்பொருள்களுடன் சேர்ந்து வரும் வைட்டமின் மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறோம் என்றார் அவர்.