தமிழ் சினிமாவின் ஆரம்ப காலம் தயாரிப்பாளர்கள் கையில் இருந்தது. ஏவிஎம் மெய்யப்ப செட்டியார், ஜெமினி வாசன், சாண்டோ சின்னப்பா தேவர் இவர்கள் எல்லாம் முதலாளிகளாக வலம் வந்தார்கள். எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் ஹீரோக்கள் கைக்கு வந்தது சினிமா. அதன்பிறகு இயக்குனர்கள் கை ஓங்கியது. கே.பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன், ஸ்ரீதர், மணிரத்னம் ஆகியோரின் வருகைக்கு பிறகு இந்த நிலை உருவானது. இவர்கள் படங்களில் நடிக்க முன்னணி நடிகர் நடிகைகள் காத்திருந்தார்கள். இவர்கள் சற்று தளர்ந்த பிறகு மீண்டும் ஹீரோக்கள் தலையெடுக்க ஆரம்பித்தார்கள். ரஜினி, கமல், விஜய், அஜீத், போன்றவர்களின் ஹீரோக்கள் சக்தியானார்கள். ஆனால் இப்போது மீண்டும் இயக்குனர் கைக்குள் வந்திருக்கிறது சினிமா.
இப்போது ஹீரோக்களுக்காக படம் ஒடுவதில்லை. பெரிய ஹீரோக்களுக்கு மூன்று நாள் ஓப்பனிங் இருக்கலாமே தவிர அவர்களுக்காக படம் ஓடுவதில்லை. இயக்குனர்கள்தான் கேப்டன் ஆப்தி ஷிப் ஆக இருக்கிறார்கள். கார்த்திக் சுப்புராஜா (பீட்சா), நலன் குமாரசாமி (சூது கவ்வும்), பாலாஜி தரணிதரன் (நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்) ஆகியோர் ஒரே படத்தின் மூலம் கேப்டன் ஆனவர்கள். ஹீரோக்கள் இவர்களை அழைத்து கதை கேட்டார்கள். முதல் படத்தில் 5 லடசத்துக்குள் சம்பளம் வாங்கியவர்கள் அடுத்த படத்துக்கு கோடியில் சம்பளம் பேசினார்கள்.
இயக்குனர்கள் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், பிரபுதேவா, லிங்குசாமி, ராஜேஷ் எம், பிரபுசாலமன், சுசீந்திரன், போன்றவர்கள் டாப் கீயரில் போய்க்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்காக ஹீரோக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சம்பள விஷயத்திலும் ஹீரோக்களை மிஞ்சி விட்டார்கள். சம்பளத்தில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறவர் ஷங்கர். தமிழ் படத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்குகிறவரும் இவர்தான். மூன்று கோடி ரூபாய் ரோல்ஸ்ராய் கார் வைத்திருப்பவரும் இவர்தான். நண்பன் படத்துக்காக ஷங்கர் பெற்ற சம்பளம் 11 கோடி. இது படத்தில் நடித்த விஜய்க்கு ஈடான சம்பளம். இப்போது ஐ படத்துக்கு ஷங்கரின் சம்பளம் 15 கோடி என்றும் லாபத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் பங்கு என்றும் கூறப்படுகிறது. இந்தியாவிலேயே படத்தின் லாபத்தில் பங்கு வாங்கும் ஒரே இயக்குனரும் ஷங்கர்தான்.
அடுத்த இடத்தில் இருப்பவர் ஏ.ஆர்.முருகதாஸ், இந்தியில் கஜினி ஹிட்டான பிறகு அவர் சம்பளம் பத்து கோடியை தாண்டியது. துப்பாக்கி படத்துக்கு பத்து கோடி சம்பளம் வாங்கியதாக கூறுகிறார்கள். துப்பாக்கி இந்தி ரீமேக்கிற்கு முருகதாஸ் சம்பளம் 15 கோடி என்கிறார்கள். ஷங்கர், முருகதாஸ் படங்கள் என்றால் 100 கோடியை தாண்டிய பிசினஸ் என்பதால் இந்த சம்பளம் தருவதற்கு தயாரிப்பாளர்கள் யோசிப்பதில்லை. பிரபு தேவாவும் பத்து முதல் 15 கோடி சம்பளம் வாங்கினாலும் அவர் இந்திப் படங்களில் மட்டுமே இந்த சம்பளம் பெறுகிறார்.
புதுமுக இயக்குனர்கள் ஒரு ஹிட் கொடுத்து விட்டால் அடுத்த படத்துக்கு மினிமம் ஒரு கோடிதான் சம்பளம். இயக்குனர்கள் விஜய், பிரபுசாலமன், சற்குணம், எஸ்.பி.ஜனநாதன், சுசீந்திரன், சுந்தர்.சி. போன்றவர்கள் இரண்டு கோடி மூன்று கோடி சம்பளம் வாங்குகிறார்கள். இது அவர்கள் படத்தில் நடிக்கும் ஹீரோக்களை விட கூடுதலான சம்பளமாக இருக்கும். இவர்கள் பெரிய ஹீரோக்களை இயக்கும்போது வேண்டுமானால் பெரிய வித்தியாசம் இருக்கலாம்.
ஹீரோக்கள் இப்போது தங்களை நம்பி தங்கள் மார்க்கெட்டை நம்பி படம் நடிப்பதில்லை. நல்ல ஸ்கிரிப்ட், நல்ல இயக்குனர்கள் படத்தில் நடிக்கவே விரும்புகிறார்கள். அவர்களுக்காக காத்திருக்கிறார்கள். மீண்டும் இயக்குனர்கள் சினிமாவில் ஆட்சியை பிடித்திருக்கிறார்கள்.
நல்ல செய்தி. கதாநாயகர்கள் கையில் திரை உலகம் இருப்பது நல்லதல்ல.