கொழும்பு கொமன்வெல்த் மாநாடு: பிரதமர் பங்கேற்றால் விளைவுகளை காங்கிரஸ் சந்திக்கும்! தமிழக கட்சி தலைவர்கள்

tn_leadersஇலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றால் அதற்கான விளைவுகளை காங்கிரஸ் கட்சி சந்திக்க நேரிடும் என்றும், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறும்  திமுக தலைவர் கருணாநிதி,  தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் எச்சரித்துள்ளனர்.

கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க காங்கிரஸ் உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது அரசியல் தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை தலைவர்கள் வெளியிட்ட அறிக்கை:

கருணாநிதி:

இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டுக்கு பிரதமர் செல்லக்கூடாது என்று தமிழ் உணர்வு படைத்த எல்லாக் கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.

தமிழகச் சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால் மாநாட்டுக்குப் பிரதமர் செல்ல உள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.

தமிழர்களை வேட்டையாடிய சிங்கள வெறியர்கள் நடத்தும் கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொண்டால், அதனுடைய விளைவுகளை அவர் சார்ந்துள்ள கட்சியே அனுபவிக்க நேரிடும். வினை விதைத்தவர்கள், வினை அறுப்பார்கள்.

பிரதமர் மட்டுமல்லாது, இந்தியாவைச் சார்ந்த துரும்புகூட இந்த மாநாட்டுக்குச் செல்லக்கூடாது.

விஜயகாந்த்:

தமிழக மக்களின் உணர்வுகளைப் புறக்கணிக்கும் வகையில் பிரதமர் மன்மோகன் சிங் செயல்படுவது வேதனைக்குரியது.

கொமன்வெல்த் என்பது சர்வதேச அமைப்பு, அதனால் அந்தக் கூட்டத்தில் பங்கேற்போம் என்று கூறுவது மனித உரிமை மீறல்களை இந்தியா அனுமதிக்கிறது என்றுதான் பொருள்படும்.

கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கும் போது இந்தியா மட்டும் எந்தக் காரணத்தையாவது கூறிக்கொண்டு, மாநாட்டில் பங்கேற்றாலும், அது தமிழக மக்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்துவதாகவே அமையும்.

எனவே, பிரதமர் தன் முடிவினை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

ராமதாஸ்:

இந்தியாவின் பாதுகாப்புக்கும், அண்டை நாடுகளுடனான உறவைப் பேண வேண்டியது அவசியம் என்பதாலும் இந்த முடிவை எடுப்பதாகக் காங்கிரஸ் கூறுகிறது.

இலங்கை எப்போதும் இந்தியாவுக்குச் சாதகமாகவே செயல்பட்டது இல்லை.

இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க தீர்மானித்திருப்பதை தமிழக மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.

பிரதமர் தன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இல்லாவிட்டால் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

தொல்.திருமாவளவன்:

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதை பிரதமர் தவிர்க்க வேண்டும்.

இந்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டால் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்திக்கும்.

காங்கிரஸ் அதன் முடிவைத் திரும்ப பெறக் கோரி நவம்பர் 3ம் திகதி எனது தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

TAGS: