உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் சிட்டிபாபு (49) சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இருதய அறுவை சிகிச்சைக்குப் பின், சினிமாவில் நடிக்காமல் சிட்டிபாபு ஓய்வு எடுத்து வந்தார். கடந்த மாதங்களாக அவர் மீண்டும் படங்களில் நடிக்க துவங்கினார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை பெற்று வந்த சிட்டிபாபுவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து சென்னை முகப்பேரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கும் உடல் நிலையில் மாற்றம் இல்லாததால், ராயப்பேட்டை அரசு மருத்துவனை தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த புதன்கிழமை அனுமதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை இறந்தார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான சிட்டிபாபு, 2003-ஆம் ஆண்டில் வெளிவந்த “பாய்ஸ்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதே ஆண்டில் வெளிவந்த “தூள்’ படம் அவருக்கு திரையுலகில் சிறப்பான இடத்தை தந்தது. தொடர்ந்து “சிவகாசி’, “திருத்தணி’, “திண்டுக்கல் சாரதி’, “மாப்பிள்ளை’ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த “மாசாணி’ அவர் நடித்து வெளிவந்த கடைசிப் படமாகும்.
சிட்டிபாபுவுக்கு ஜெரினா என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நந்தனத்தில் உள்ள பள்ளிவாசலில் இஸ்லாமிய முறைப்படி வெள்ளிக்கிழமை மாலை இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.
பலரை சிரிக்க வைத்த சிட்டி பாபுவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் !
நல்ல மனிதர் ,,பிறரை சிரிக்க வைத்தவர் ,,,அண்ணனின் ஆத்மா சாந்தி அடையவேண்டும்