எலிசபெத் ராணியைவிட மிகப்பெரிய பணக்காரி சோனியா காந்தி!

soniaஉலக அரசியல் தலைவர்களில் 12 வது பெரிய பணக்காரராக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி திகழ்வதாக செய்தி வெளியாகி உள்ளது.

உலக அரசியல் தலைவர்கள் 20 பேர்களது சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்த பட்டியலை ‘ஹஃபிங்டன் போஸ்ட்’ என்ற ஆங்கில இணைய தளம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களது நாடுகளில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் வறுமையில் வாடும் நிலையில், தலைவர்களின் சொத்து மதிப்பு மட்டும் விண்ணை தொடுவதாக உள்ளது என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2009 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது சோனியா காந்தி தாக்கல் செய்த வேட்பு மனுவில், அவரது சொத்து மதிப்பு 1.38 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தனக்கு இந்தியாவில் சொந்த காரோ அல்லது வீடோ கிடையாது என்றும், இத்தாலியில் மட்டும் குடும்ப பரம்பரை வீடு உள்ளதாகவும், அதன் மதிப்பு 18.2 லட்சம் ரூபாய் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால் சோனியா காந்தியின் சொத்து மதிப்பு 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 12 ஆயிரம் கோடி ரூபாய் என அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.

அதாவது இங்கிலாந்து ராணி 2வது எலிசபெத், மொனாக்கோ இளவரசர் மற்றும் எண்ணெய் வளங்கள் கொண்ட பல்வேறு மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களை காட்டிலும் சோனியா முன்னணியில் இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. 2வது எலிசபெத்தின் சொத்து மதிப்பு 400 முதல் 500 மில்லியன் டொலர்கள் என்றும் அவர் 18வது இடத்தில் உள்ளதாகவும், சிரியா அதிபர் பசர் அல் ஆசாத் 550 மில்லியன் டொலர்களுடன் 16ெவது இடத்தில் உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது அதிகாரத்தில் இருக்கும் உலக நாடுகளின் தலைவர்களின் சொத்துக்கள் குறித்து தாங்கள் திரட்டிய தகவல்கள் மற்றும் கிடைத்த புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இதனை தாங்கள் தெரிவிப்பதாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 40 பில்லியன் அமெரிக்க டொலராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு இந்த பட்டியலில் இடம் இல்லை. ஒபாமாவுக்கு பல மில்லியன் டொலர்கள் சொத்து உள்ளபோதிலும், அவரால் சொத்து விடயத்தில் அவரது சமகால மற்ற நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்களுடன் நெருங்கக்கூட முடியவில்லை.

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்றவர்களில் பெரும்பாலானவர்கள் மன்னர்கள், அதிபர்கள், சுல்தான்கள் மற்றும் ராணிகள் என அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

TAGS: