வருமான வரியை ரத்து செய்வதால் கேடுதான் ஏற்படும் என்று இந்திய அரசின் ஒய்வுபெற்ற வருவாய்த் துறைச் செயலர் எம் ஆர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
பொருட்களை வாங்கி-விற்கும் வர்த்தக செயற்பாடுகளின்போது பரிவர்த்தனை வரி விதிக்கும் நடைமுறையை கொண்டு வந்தால், பலர் பொருட்களின் விலையை குறைத்து மதிப்பிட்டோ அல்லது வரி விதிப்பில் இருந்து தப்ப பணத்தைக் கொடுத்து வாங்கவோ முயல்வார்கள், எனவே இந்தப் புதிய வரியால் வரி வருமானம் கூடாது என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள பல நேரடி மற்றும் மறைமுக வரிகளை விலக்கி விட்டு பொருட்களை வாங்கும்போது மட்டும் செலுத்தக் கூடிய பரிவர்தனை வரியை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பாரதிய ஜனதா கட்சியின் சில தலைவர்களும் அவர்களுடன் நெருங்கி செயல்படுவோரும் முன்வைக்கின்றனர்.
தனிநபர் வருமான வரி, பெருவணிக நிறுவனவரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை முற்றாக ஒழித்துவிட்டு, அதற்குப் பதிலாக பரிவர்த்தனை வரியைக் கொண்டு வந்தால் நாட்டின் வரி வருமானம் கணிசமாக அதிகரிக்கும், கருப்புப் பணப் பிரச்சனையும் ஒழியும் என்ற கருத்தை சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி பல காலமாக வலியுறுத்தி வருகிறார்.
சாத்தியமற்றது
யோகாசன குருவான ராம்தேவும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளார். இந்த யோசனையை தாம் பரிசீலிக்கப்போவதாக பாஜகவின் முன்னாள் தலைவர் நித்தின் கட்கரியும், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியும் கூறியுள்ளனர். ஆனால் இது நடைமுறை சாத்தியமில்லாத யோசனை என்று பாஜகவைச் சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.
தனிநபர் வருமான வரி மற்றும் பெருவணிக நிறுவனங்கள் செலுத்தும் வரியால் ஆண்டுக்கு 6 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் மத்திய அரசுக்கு வருவாய் கிடைக்கும் நிலையில், பரிவர்த்தனை வரியால் இந்த அளவுக்கு வருவாய் கொடுக்க முடியுமா என்றும் சந்தேகம் வெளியிட்ட எம் ஆர் சிவராமன், வருமான வரியை ஒழிப்பது என்பது முட்டாள்தனமான யோசனை என்றார். -BBC