நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல், விளையாட்டு வீரர்கள் லியாண்டர் பயஸ், யுவராஜ் சிங், நடிகை வித்யா பாலன் உள்ளிட்ட 127 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. பாரத ரத்னா விருதுக்கு இரு மாதங்களுக்கு முன்பு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், 2 பேருக்கு பத்ம விபூஷன், 24 பேருக்கு பத்ம பூஷன் மற்றும் 101 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம விபூஷன்
விஞ்ஞானி ஆர்.ஏ. மஷேல்கர் மற்றும் யோகா குரு பி.கே.எஸ். ஐயங்கார் ஆகியோருக்கு இந்த ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்படுகிறது. பாரத ரத்னாவுக்கு பிறகு இரண்டாவது உயரிய விருதைப் பெறும் இவ்விருவரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள்.
பத்ம பூஷன்
தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, கடம் கலைஞர் டி.எச்.விநாயக் ராம் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பத்மஸ்ரீ
தமிழகத்தைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், டாகடர் அஜய் குமார் பரிடா, தொழில் துறை பிரிவில் மல்லிகா சீனிவாசன், மருத்துவம் பிரிவில் டாக்டர் தேனும்கல் பொலூஸ் ஜேக்கப் மற்றும் பேராசிரியர் ஹக்கீம் செய்யத் ஹலீஃபதுல்லா, விளையாட்டுப் பிரிவில் ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட், முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா, பேட்மிட்டன் பயிற்சியாளர் கோபிசந்த், டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், எழுத்தாளர் அனிதா தேசாய் உள்ளிட்டோர் பத்ம பூஷன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், திரைப்பட நட்சத்திரங்கள் பரேஷ் ராவல், வித்யா பாலன் உள்ளிட்டோர் பத்மஸ்ரீ விருதைப் பெறுகின்றனர்.
பகுத்தறிவாளர் என்.ஏ.தபோல்கர் உள்பட 3 பேருக்கு, அவர்களது இறப்புக்குப் பிறகு பத்ம விருதுகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.