ராஜபக்சவுடன் கை குலுக்கும் பிரதமர் தேவையா?- ஜெயலலிதா ஆவேசம்

jayalalitha2இந்திய மீனவர்களை சிறைபிடிப்பதை நிறுத்துங்கள் என்று கண்டிப்புடன் சொல்வதை விட்டுவிட்டு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் கை குலுக்கும் பிரதமர் தேவையா என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாகப்பட்டினத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே தமிழக முதல்வர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

பிறரை வாழ வைப்பவர்கள் தமிழர்கள். வாழ வைத்த தமிழர்களை வஞ்சித்த அரசு, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. மத்திய காங்கிரஸ் அரசின் வஞ்சகச் செயல்களுக்கு உறுதுணையாக இருந்தது தி.மு.க.

இந்தப் பகுதி மீனவர்கள் மற்றும் மீன்பிடித் தொழில் நிறைந்த பகுதி. ஆனால் இந்தத் தொழிலில் எத்தகைய இடையூறுகளை, இன்னல்களை நீங்கள் எதிர்கொண்டு இருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்.

இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தல்களுக்கும், கொடுமைகளுக்கும், சிறைபிடிப்புகளுக்கும் நீங்கள் அடிக்கடி ஆட்படுத்தப்படுகிறீர்கள். இவை நிகழும்போதெல்லாம் உடனடியாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலமும், தூதரக நடவடிக்கைகள் மூலமும், தமிழக மீனவர்கள் விடுவிக்கப் படுவதற்கான நடவடிக்கைகளை நான் எடுத்து வருகிறேன்.

தமிழக மீனவர்கள் அன்றாடம் தங்களது மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள சாத்தியமான ஒரு தீர்வினை காணும் பொருட்டு 27.1.2014 அன்று சென்னையில் தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற நான் ஏற்பாடு செய்தேன்.

இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்பு இலங்கை சிறைகளில் வாடிக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன். எனது வலியுறுத்தலின் பேரில் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான முடிவு ஏற்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை 13.3.2014 அன்று இலங்கையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற ஏதுவாக இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன் இலங்கை அரசு விடுவிக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் எனது தலைமையிலான தமிழக அரசு விதித்துள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தைக்கான நாள் முடிவு செய்யப்பட்ட பின்னரும் இதனை சீர்குலைக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து 8 படகுகளில் 3.3.2014 அன்று மீன் பிடிக்கச் சென்ற 30 தமிழக மீனவர்களையும், 2 காரைக்கால் மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.

கடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், இதுவரை 148 தமிழக மீனவர்கள் கடல் எல்லையை தாண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி நான் பாரதப் பிரதமருக்கு கடிதங்களை எழுதி உள்ளேன்.

இருப்பினும் இலங்கை அரசின் இந்தச் செயலை இந்திய அரசு கண்டிக்கவும் இல்லை. விடுவிக்க நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது கடிதங்களுக்கு பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் பதிலும் அனுப்பவில்லை. நேற்றும், இன்றும் கூட 24 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் மியான்மாரில் நடைபெற்ற மூன்றாவது வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு முயற்சிகள் மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பாரத பிரதமர் மன்மோகன் சிங் கைகுலுக்கிய படம் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது.

தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான என்ன நடவடிக்கையை இந்திய பிரதமர் எடுத்துள்ளார்?

தமிழ்நாட்டு மீனவர்கள் இந்திய குடிமக்கள் தான். எங்கள் இந்திய மீனவர்களை விடுதலை செய்யுங்கள்! எங்கள் இந்திய மீனவர்களை சிறைபிடிப்பதை நிறுத்துங்கள் என்று கண்டிப்புடன் சொல்வதை விட்டுவிட்டு இலங்கை ஜனாதிபதியுட்ன கை குலுக்குகிறார் பாரதப் பிரதமர். இப்படிப்பட்ட பிரதமர் தேவை தானா? இப்படிப்பட்ட காங்கிரஸ் ஆட்சி தேவை தானா? தூக்கி எறிய வேண்டாமா? தூக்கி எறிய வேண்டும்.

இலங்கை இனப் போரின் போது போர்க்குற்றங்கள் செய்த இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு முன்பு தீர்மானம் கொண்டு வர அமெரிக்கா இங்கிலாந்து உட்பட ஐந்து நாடுகள் முன் வந்துள்ளன.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிய வேண்டிய தார்மீகப் பொறுப்புள்ள இந்தியா, பிற நாடுகளால் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானத்தை முன்மொழிய முன் வரவில்லை.

இப்படிப்பட்ட காங்கிரஸ் அரசு நமக்கு தேவை தானா? இந்த தமிழின விரோத மத்திய காங்கிரஸ் அரசை நீங்கள் இந்தத் தேர்தலில் தூக்கி எறிய வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

மீனவர் பிரச்சனைக்கு மூல காரணமாக விளங்குவது கச்சதீவு பிரச்சனை. தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்த கச்சதீவை, அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு தாரைவார்த்த போது அதை தடுக்கத் தவறியது தி.மு.க. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண ஒரே வழி கச்சத் தீவினை மீட்பது தான்.

கச்சதீவு பகுதியில் நமக்குள்ள உரிமையை மீண்டும் நிலைநாட்டுவது தான். இதனை நிறைவேற்ற, வருகின்ற மக்களவைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நீங்கள் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும் என கூறினார்.

TAGS: