அமேதி: அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு இருப்பிட சான்றிதழ் வழங்க முடியாது என்று உத்திரப்பிரதேச மாநில அரசு தெரிவித்து இருப்பது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தி வேட்பாளருக்கான தனி வங்கி கணக்கு தொடங்குவதற்கான இருப்பிடச் சான்று கோரி அங்குள்ள கோட்டாச்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார். இந்த விண்ணப்பத்தை நிராகரித்துள்ள கோட்டாச்சியர் அமேதியில் ராகுல் காந்தி வசிப்பதற்கான ஆதாரம் இல்லை என கூறியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக அமேதி தொகுதியில் எம்.பி. ஆக ராகுல் காந்தி இருந்து வரும் நிலையில் அவர் அரிதாக கூட அமேதியில் தங்கி இருந்ததில்லை என்று கோட்டாச்சியர் கூறியுள்ளார். மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செலவுக்காக தனி வங்கி கணக்கு தொடங்கி அதன் விவரத்தை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தி தனி வங்கி கணக்கு தொடங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் அவருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.