ரயில் குண்டு வெடிப்பு : சந்தேக நபரின் வீடியோ கிடைத்தது

chennai_centralblastசென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் கவுகாத்தி – பெங்களூரு ரயிலில் வியாழக்கிழமையன்று வெடித்த குண்டுகளை வைத்ததாக கருதப்படும் சந்தேக நபரின் நடமாட்டம் அடங்கிய வீடியோ பதிவு கிடைத்துள்ளதாக தமிழக சிபிசிஐடி ஐஜி மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

ஆனால், சந்தேகிக்கப்படும் நபர்தான் குற்றவாளி என்று கூற முடியாது என்றும் இந்த வீடியோ பதிவு சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பதிவானாது என்றும் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கொஹாத்தி பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகளில் வியாழக்கிழமையன்று காலையில் இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இதில் ஒரு பெண் பலியானார். பதினான்கு பேர் காயமடைந்தனர். இந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களிடம் சிபிசிஐடி காவல்துறையினர் இன்று விசாரணை நடத்தினர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பதிவான காட்சிகளில் இருந்து எடுக்கப்பட்ட படங்களை வைத்தும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாரையாவது அவர்கள் பார்த்தார்களா என்பது குறித்தும் இந்த விசாரணை நடத்தப்பட்டது. பெங்களூர் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் கிடைத்த படங்கள் குறித்தும் காயமடைந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சிபிசிஐடி ஐஜி மகேஷ்குமார், குண்டுவெடித்த இடத்தில் உடைந்த கடிகாரங்களின் பாகங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதால் வெடித்தது டைமர் பாமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

அதிகாலை ஐந்து நாற்பது மணிக்கு வர வேண்டிய ரயில் தாமதமாக வந்த்தாலேயே வெடிகுண்டு சென்னையில் வெடித்ததாகவும் இல்லாவிட்டால், ஆந்திர எல்லையில் வெடித்திருக்கும் என்றும் மகேஷ்குமார் தெரிவித்தார். அதேபோல, 2013ஆம் ஆண்டில் பட்னாவில் நடந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருளே இந்த குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக மகேஷ்குமார் தெரிவித்தார்.

குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடந்துவதற்காக 6 பேர் கொண்ட தேசிய பாதுகாப்பு படையினர் சென்னை வந்துள்ளனர். இவர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். குண்டுவெடிப்பால் சேதமடைந்த ரயில் பெட்டிகளையும் முழுமையாக சோதனை செய்தனர்.

குண்டுப்புரளி

இதற்கிடையில் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள தனியார் வணிக வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த வணிக வளாகத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு, தீவிர சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில், வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப் படவில்லை. இது வெறும் புரளி என தெரியவந்த்து.

குண்டுவெடிப்பில் காயமடைந்த பதினான்கு பேரில் முரளி, ஜிதேந்திர தேக்கா என்ற இரண்டு பேர் இன்று மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

குண்டுவெடிப்பிற்குப் பிறகு சென்னை நகரம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, நகரம் முழுவதும் வாகன சோதனையும் நடைபெற்றுவருகிறது. -BBC

TAGS: