புதுடெல்லி, மே.7– தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கக்கோரி விலங்குகள் நலவாரியத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் மத்திய அரசு, தமிழக அரசு, ஜல்லிக்கட்டு பேரவை, மிருக நலவாரியம் ஆகியோர் தரப்பில் வாதங்கள் நடைபெற்றன.
தமிழக அரசின் சார்பில் எடுத்து வைக்கப்பட்ட கருத்துக்கள் வருமாறு:–
ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்றும் இதில் காளைகள் துன்புறுத்தப்படுவது இல்லை. மேலும் காளைகள் விளையாட்டு, உலகின் பல நாடுகளிலும் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகின்றன.
சில நாடுகளில் காளை விளையாட்டுகள் முடிந்ததும் அதனை ஈட்டியால் குத்திக் கொன்று விடுகின்றனர். இங்கு இது போன்ற கொடுமைகள் நடப்பது இல்லை. மாறாக, காளைகளின் மீது பெரிதும் அக்கறை காட்டப்படுகிறது. அரசு மற்றும் நீதிமன்றங்கள் வகுத்த விதிமுறைகள் அனைத்தும் முறைப்படி பின்பற்றப்படுகின்றன.
மத்திய அரசின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்கவும் காளைகளின் மீது ஏதாவது கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்தவும் மிருகங்கள் நலவாரியத்தின் அதிகாரிகளை நியமிக்கலாம்.
இவ்வாறு விவாதத்தின் போது தெரிவிக்கப்பட்டது.
மிருகங்கள் நலவாரியத்தின் சார்பாக கூறப்பட்ட விவாத்தின்போது, ‘‘ஜல்லிக்கட்டு போட்டிகளில் அனைத்து விதிமுறைகள், மத்திய அரசு கட்டுப்பாடு அனைத்தையும் கணக்கில் கொண்டாலும் இது சட்டவிரோதமானது. போட்டிகளில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் கடைபிடிக்கப்படுவது இல்லை. இதுபோன்று கட்டுப்பாடுகள் தோல்வியடைந்ததால், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும்‘‘ என்று தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மாதம் 24–ந்தேதி முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று (புதன்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நீதிபதி கே.எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, ஜல்லிக்கட்டு போட்டிக்கு சுப்ரீம்கோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டது.
13 அம்சங்களை சுட்டிக் காட்டிய நீதிபதிகள் அதன் அடிப்படையில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பதாக அறிவித்தனர்.