பயங்கரவாதச் செயல்களை தடுத்து நிறுத்துங்கள் நவாஸ் ஷெரீஃப்பிடம் பிரதமர் மோடி கண்டிப்பு

  • தில்லி ஹைதராபாத் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு முன்பாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி.
  • தில்லி ஹைதராபாத் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு முன்பாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி.

பாகிஸ்தான் மண்ணிலிருந்து இந்தியாவுக்கு எதிராக தூண்டிவிடப்படும் பயங்கரவாதச் செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணையில் பாகிஸ்தான் சுணக்கம் காட்டி வருவது கவலை தருவதாகவும் நரேந்திர மோடி, ஷெரீஃப்பிடம் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் பாகிஸ்தான், இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு ஏற்கெனவே அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவுக்கு வருகை தந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், புது தில்லியில் நரேந்திர மோடியை சந்தித்து பேசவும் விருப்பம் தெரிவித்திருந்தார். திங்கள்கிழமை பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட நவாஸ் ஷெரீஃப், செவ்வாய்க்கிழமை தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் புதிய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். சுமார் 40 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது பயங்கரவாதம், மும்பை தாக்குதல் தொடர்பான விசாரணையில் தேக்கம், பரஸ்பரம் இருநாட்டு உறவுகள் ஆகியவை குறித்து இருவரும் பேசினர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சுஷ்மா ஸ்வராஜ், வெளியுறவுத்துறை செயலர் சுஜாதா சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.

இருநாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலர் சுஜாதா சிங் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

பாகிஸ்தான் மண்ணிலிருந்து இந்தியாவுக்கு எதிராக தூண்டிவிடப்படும் பயங்கரவாதச் செயல்கள் குறித்த தனது கவலையை அந்த நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பிடம், பிரதமர் நரேந்திர மோடி எழுப்பினார். பயங்கரவாதச் செயல்களுக்கு நாங்கள் ஒருபோதும் இடம் தர மாட்டோம். பயங்கரவாதத்தை ஒழிப்பதில் துணை நிற்போம் என்று பாகிஸ்தான் ஏற்கெனவே இந்தியாவிடம் உறுதியளித்துள்ளது. அதை பின்பற்றி நடக்க வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார்.

மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் போதிய முனைப்பு காட்டாமல் இருப்பது கவலை தருகிறது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவது, வர்த்தக நடவடிக்கைகளை அதிகரிப்பது குறித்தும் இருநாட்டுத் தலைவர்களும் பேசினர்.

இருநாடுகளிடையேயான அமைதி பேச்சுவார்த்தையை எவ்வாறு முன்னெடுத்து செல்வது என்பது தொடர்பாக இருநாடுகளின் வெளியுறவுத்துறை செயலாளர்கள் பேசி முடிவு செய்வது என்று நவாஸ் ஷெரீஃப்பும், மோடியும் ஒப்புக் கொண்டனர்.

மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் விவகாரத்தை நரேந்திர மோடி, நவாஸ் ஷெரீஃப்பிடம் எழுப்பினாரா? என்ற கேள்விக்கு, பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றன. ஆனால், அதுபற்றிய விவரங்களை இப்போது கூற இயலாது என்று சுஜாதா சிங் தெரிவித்தார்.

பாகிஸ்தான் வரும்படி அழைப்பு: பேச்சுவார்த்தையின்போது, பாகிஸ்தானுக்கு வரும்படி மோடிக்கு நவாஸ் ஷெரீஃப் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை மோடியும் ஏற்றுக் கொண்டார். ஆனால் இதற்கான தேதி எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்றார் சுஜாதா சிங்.

ஜாமா மசூதியில் தொழுகை: முன்னதாக தில்லி ஜாமா மசூதிக்குச் சென்று நவாஸ் ஷெரீஃப் பிரார்த்தனை நடத்தினார்.

பழைய தில்லியில், முகலாயப் பேரரசு காலத்தில் கட்டப்பட்ட செங்கோட்டைக்கு தன்னுடன் வந்திருந்த பாகிஸ்தான் அதிகாரிகள் குழுவினருடன் சென்று நவாஸ் ஷெரீஃப் சுற்றிப் பார்த்தார்.

பின்னர் மாலையில் பாகிஸ்தானுக்கு நவாஸ் ஷெரீஃப் புறப்பட்டுச் சென்றார்.

TAGS: