கருப்புப் பணம்: சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது மத்திய அரசு

shahவெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி. ஷா தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

இதற்கான முடிவு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கு பிறகு, மத்திய சட்டத்துறை மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்பது தொடர்பான

சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பது குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

கருப்புப் பணத்தை மீட்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி. ஷா தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இது கருப்புப் பணத்தை மீட்கும் விவகாரத்தில் புதிதாக அமைந்துள்ள மத்திய அரசு கொண்டுள்ள ஆர்வத்தை காண்பிக்கிறது’ என்று கூறினார்.

சிறப்பு புலனாய்வுக் குழு குறித்த விவரங்களை மத்திய அரசு அறிக்கை மூலம் வெளியிட்டது. அதில், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அர்ஜீத் பசாயத் துணைத் தலைவர் பதவி வகிப்பார். வருவாய் உளவுப்பிரிவு இயக்குநர், போதைப்பொருள் தடுப்புத்துறையின் இயக்குநர், பொருளாதார உளவுப் பிரிவின் இயக்குநர், “ரா’ உளவுப் பிரிவின் இயக்குநர், மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்தின் இணைச் செயலர் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெறுவார்கள்.

இந்தக் குழுவினர் கருப்புப் பணம் தொடர்பாக நடைபெற்று வரும் வழக்குகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள்.

கருப்புப் பண வழக்குகளின் நிலை குறித்து அவ்வப்போது உச்ச நீதிமன்றத்துக்கு இந்தக் குழுவினர் தகவல் அளிப்பார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னணி: வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூத்த வழக்குரைஞர் ராம்ஜேத் மலானி தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

கருப்புப் பணத்தை மீட்க சிறப்பு புலனாய்வுக் குழுவை மத்திய அரசு நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பலமுறை கெடு விதித்தது.

ஆனால் இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததையடுத்து உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

இதையடுத்து, பல்வேறு பரிசீனைகளுக்குப் பிறகு சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவரையும், துணைத் தலைவரையும் உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும் என்று கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் இந்த உத்தரவை பிறப்பிக்க கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசு சார்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, ஒரு வாரம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த அவகாசம் புதன்கிழமையுடன் (மே 28) முடிவடைகிறது. இந்நிலையில், புதிதாக பதவி ஏற்றுள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் மத்திய அமைச்சரவை

கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் உமா பாரதி, ஹர்சிம்ரத் கௌர், ராம்விலாஸ் பாஸ்வான்,

கோபிநாத் முண்டே, ராதா மோகன் சிங் மற்றும் ஹர்ஷவர்தன்.

TAGS: